என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Headmaster Tranform"

    • தலைமை ஆசிரியர் ஜான் சேவியர் பணி நேரத்தில் மது குடித்து விட்டு பள்ளிக்கு வருவதாக கூறப்படுகிறது.
    • மாணவர்களுக்கு சரியாக பாடம் எடுக்காமல் இருந்து வந்தார். இது குறித்த தகவல் மாணவர்களின் பெற்றோருக்கு தெரியவந்தது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அனுப்பர்பாளையம் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இந்த பள்ளியில் ஜான் சேவியர் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 1 மாதத்துக்கு முன்பு மாறுதலாகி இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்று கொண்டார்.

    இந்த நிலையில் தலைமை ஆசிரியர் ஜான் சேவியர் பணி நேரத்தில் மது குடித்து விட்டு பள்ளிக்கு வருவதாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்களுக்கு சரியாக பாடம் எடுக்காமல் இருந்து வந்தார். இது குறித்த தகவல் மாணவர்களின் பெற்றோருக்கு தெரியவந்தது. இது குறித்து கல்வி அதிகாரிகளிடம் அவர்கள் புகார் கூறினர். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து தலைமை ஆசிரியர் தொடர்ந்து மது குடித்து விட்டு பள்ளிக்கு வந்து கொண்டு இருந்தார்.

    இந்த நிலையில் மாணவர்களின் பெற்றோர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் ஒன்று திரண்டு பள்ளிக்கு வந்தனர். அவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வந்தார். அவரை பொதுமக்கள் பள்ளிக்கு செல்ல விடாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தலைமை ஆசிரியர் ஜான் சேவியர் திரும்பி சென்று விட்டார்.

    இது பற்றி தெரிய வந்ததும் கல்வி அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுத்தால் தான் செல்வோம் என கூறினர். தொடர்ந்து அதிகாரிகள் அவர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.

    இந்த நிலையில் தலைமை ஆசிரியர் ஜான் சேவியரை இடமாற்றம் செய்து கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    ×