என் மலர்
நீங்கள் தேடியது "Handing over to the police at the detention unit"
- 2 லாரி, வேன் சிக்கியது
- கும்பல் தப்பி ஓட்டம்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகாவுக்கு உட்பட்ட பள்ளிகொண்டா-ஆம்பூர் இடையே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சில கிராமப்புற பகுதிகளில் இரவு நேரங்களில் பதுக்கி வைக்கப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றி ஆந்திர மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக வந்த தொடர்புகளின் பேரில் ரேசன் அரிசி கடத்தல் லாரிகளை தொடர்ந்து கண்காணித்து பிடிக்குமாறு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன் மற்றும் வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து பள்ளிகொண்டா- ஆம்பூர் இடையே தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வருவாய்த் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அகரம்சேரி கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பார்க்கிங் பகுதியில் இரவு நேரத்தில் ரேசன் அரிசி மூட்டைகளை லாரிகள் மூலம் கடத்துவதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன் தலைமையில் குடியாத்தம் தாசில்தார் லலிதா, குடியாத்தம் வட்ட வழங்கல் அலுவலர் தேவி உள்ளிட்ட வருவாய் துறையினர் நேற்று இரவு குறிப்பிட்ட அந்த பார்க்கிங் பகுதியில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வருவாய் துறையினரை கண்டதும் அங்கிருந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது. அங்கு சரக்கு ஆட்டோ, மினி லாரி மூலம் ரேசன் அரிசி மூட்டைகள் கொண்டு வரப்பட்டு ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட பெரிய லாரியில் ரேசன் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து உதவி கலெக்டர் தனஞ்செயன் பெரிய மற்றும் சிறிய லாரிகள் என மூன்றையும் பறிமுதல் செய்து குடியாத்தம் அடுத்த பாக்கம் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தார். மொத்தம் 473 முட்டைகளில் 23 டன் ரேசன் அரிசி இருந்தது.
கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில் ரேசன் அரிசி கடத்தலில் பிடிபட்ட லாரிகள் மற்றும் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேலூர் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது.அவர்கள் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு குடியாத்தம் பேரணாம்பட்டு பகுதியிலிருந்து ஆந்திர மாநிலம் வழியாக கர்நாடக மாநிலத்திற்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக குற்றம் சாட்டி இருந்தார். இந்த நிலையில் பள்ளிகொண்டா பகுதியில் ரேசன் அரிசி பறிமுதல் செய்திருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






