என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gun seizure"

    விடுதலைப்புலிகளின் தலைவன் பிரபாகரன், சந்தனக்கடத்தல் வீரப்பன் ஆகியோரை போன்று வருவதற்காக துப்பாக்கிகளை தயாரித்ததாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர்.
    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் புளியம்பட்டி என்ற இடத்தில் கடந்த 20-ந் தேதி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துப்பாக்கி, கத்தி, முகமூடி உள்ளிட்ட பொருட்களுடன் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

    2 பேரும் யூடியூப் சேனலை பார்த்து துப்பாக்கி தயாரித்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் சேலம் எருமாபாளையம் பகுதியைச் சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி, சஞ்சய் பிரகாஷ் ஆகியோர் என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்த கத்தி, துப்பாக்கி, துப்பாக்கி செய்வதற்கான உபகரணங்கள், முகமூடி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்யப்பட்டன. கைதான 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் கூடுதல் தகவல்களை திரட்டுவதற்காக 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் போலீசார் அனுமதி கேட்டனர்.

    இதை தொடர்ந்து கோர்ட்டு அனுமதி அளித்ததை அடுத்து போலீசார் அவர்களை 2 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

    கியூ பிரான்ச் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் 2 வாலிபர்களும் புரட்சியாளராக மாறும் நோக்கத்தில் துப்பாக்கி தயாரிப்பதாகவும் விடுதலைப்புலிகளின் தலைவன் பிரபாகரன், சந்தனக்கடத்தல் வீரப்பன் ஆகியோரை போன்று வருவதற்காக துப்பாக்கிகளை தயாரித்ததாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர்.

    மேலும் இந்தத் துப்பாக்கி தயாரிக்கும் செயலில் நவீன் என்பவருடன் பள்ளியில் ஒன்றாக படித்த சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கபிலர் என்ற வாலிபர் இருந்ததாக கூறினர் . இதை தொடர்ந்து வாலிபர் கபிலரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் 2 நாள் போலீஸ் காவல் முடிந்து ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்பு 3 பேரையும் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
    ×