search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Green manure crops"

    • தென்னந்தோப்புகளிலும், வட்டப்பாத்திகளிலும், பசுந்தாள் உரங்களை சாகுபடி செய்வது வழக்கமாக உள்ளது. குறிப்பாக சணப்பு பரவலாக பயிரிடப்படுகிறது.
    • நன்கு வளர்ந்த சணப்பு பயிர் பூக்கும் முன் மண்ணுடன் சேர்த்து உழுவதால் 5 முதல் 6 வாரத்துக்குள் நன்றாக மக்கி பயிருக்கு நல்ல உரமாக மாறி விடும்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஆகிய வட்டாரங்களில் உள்ள சுற்றுப்பகுதிகளில் கிணற்றுப்பாசனத்துக்கு பல ஆயிரம் ஏக்கரில் ஆண்டு முழுவதும் பல்வேறு சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இத்தகைய விளைநிலங்களில், ஒரே மாதிரியான சாகுபடிகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதால் மண் வளம் குறைந்து விளைச்சலும் பாதிக்கிறது. இதைத்தவிர்க்க சில விவசாயிகள் சாகுபடிக்கு முன்பாக மண் வளத்தை மேம்படுத்த பசுந்தாள் உரப்பயிர்கள் சாகுபடி செய்கின்றனர்.

    தென்னந்தோப்புகளிலும், வட்டப்பாத்திகளிலும், பசுந்தாள் உரங்களை சாகுபடி செய்வது வழக்கமாக உள்ளது. குறிப்பாக சணப்பு பரவலாக பயிரிடப்படுகிறது. காற்றில் உள்ள தழைச்சத்தை தனது வேர் முடிச்சுகளில் உள்ள நுண்ணுயிர்கள் வாயிலாக சேமிக்கும் திறன் கொண்ட சணப்பு பயிர் விதைத்த 45 நாட்களில் சுமார் 2 மீட்டர் உயரத்துக்கு வேகமாக வளர்ந்து ஏக்கருக்கு 4 முதல் 5 டன் தழை உரத்தையும் சுமார் 15 கிலோ தழைச்சத்தையும் தரும் தன்மை கொண்டதாகும். நன்கு வளர்ந்த சணப்பு பயிர் பூக்கும் முன் மண்ணுடன் சேர்த்து உழுவதால் 5 முதல் 6 வாரத்துக்குள் நன்றாக மக்கி பயிருக்கு நல்ல உரமாக மாறி விடும்.

    சணப்பு பயிர் சாகுபடி செய்யப்பட்ட தென்னந்தோப்புகளில் மண் அரிப்பு தடுக்கப்படும் என வேளாண்துறை சார்பில் தெரிவிக்கின்றனர். எனவே வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை சீசனில், சணப்பு பயிரிட்டு செடி வளர்ந்ததும், உழுது மண் வளத்தை மேம்படுத்த விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் அந்த சீசன் சமயங்களில் சணப்பு விதை கிடைப்பதில்லை. எனவே வேளாண்துறை சார்பில் குறிப்பிட்ட சீசன்களில் சணப்பு விதைகளை இருப்பு வைத்து வினியோகிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×