என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government Hostel In Tiruttani"

    மாணவர்களுக்கான அரிசியை பதுக்கியதற்காக திருத்தணி பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி வார்டன் பழனியை சஸ்பெண்டு செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
    திருத்தணி:

    திருத்தணி, கனகமா சத்திரம், ஆர்.கே.பேட்டை, நார் தவாடா, மேல்கண்டிகை உள்ளிட்ட பகுதிகளில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 10 அரசு மாணவர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்கி படித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் மாணவர்களுக்கு சரியாக உணவு வழங்கப்படுவதில்லை என்றும், உணவு தரமானதாக இல்லை என்றும் பல்வேறு புகார்கள் வந்தன.

    மேலும் விடுதி காப்பாளர்கள் மாணவர்களுக்காக சமைக்கப்படும் அரிசியை பதுக்கி ஆந்திராவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

    இதையடுத்து இன்று திருத்தணி கோட்டாட்சியர் பவநந்தி, வட்டாட்சியர் நரசிம்மன் மற்றும் அதிகாரிகள் திருத்தணியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் திடீரென்று சோதனை செய்தனர்.

    அப்போது ஒரு அறையில் அரிசிகள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. சுமார் 8 டன் எடை கொண்ட அரிசிகளை ஆந்திராவுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து விடுதி காப்பாளர் மற்றும் ஊழியர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். மேலும் விடுதியில் தங்கி இருந்த மாணவர்களிடம் உணவு தரம் பற்றி கேட்டு அறிந்தனர்.

    பின்னர் மாணவர்களுக்கான அரிசியை பதுக்கியதற்காக திருத்தணி பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி வார்டன் பழனியை சஸ்பெண்டு செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். மற்ற மாணவர்கள் விடுதிகளில் உணவு தரம் குறித்தும், அரிசி பதுக்கி விற்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    ×