search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "GirlFriend Arrested"

    • கடந்த வாரம் தன்னுடைய அந்தரங்க புகைப்படங்கள், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி இருப்பதை கண்டு பிரதீபா அதிர்ச்சி அடைந்தார்.
    • பிரதீபாவின் தாயாரின் படங்களும் அதில் இருந்தன. விகாசின் லேப்டாப்பை பிரதீபா பயன்படுத்திய போது இதை கண்டுபிடித்தார்.

    சென்னை:

    சென்னையை சேர்ந்தவர் டாக்டர் விகாஷ் (வயது27). இவர் உக்ரைனில் மருத்துவ படிப்பை முடித்துவிட்டு சென்னையில் டாக்டராக பணியாற்றி வந்தார்.

    இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உயர்படிப்புக்காக பெங்களூர் சென்றார். அங்கிருந்து உயர் படிப்பை தொடர்ந்த அவர் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு கல்வி ஆலோசனை வழங்கும் நிறுவனத்திலும் பணியாற்றினார்.

    இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் பிரதீபா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர். பெங்களூரில் வசித்து வரும் பிரதீபா எச்.எஸ்.ஆர். லே அவுட் பகுதியில் கட்டிட கலைஞராக பணியாற்றி வந்தார்.

    விகாசும், பிரதீபாவும் சில மாதங்கள் நண்பர்களாக பழகினர். அதன் பிறகு இருவரும் காதலிக்க தொடங்கினார்கள். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவர்கள் காதலித்து வந்தனர்.

    அவர்களின் காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இருவருக்கும் வருகிற நவம்பர் மாதம் திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்து வந்தனர். இதையடுத்து இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த வாரம் தன்னுடைய அந்தரங்க புகைப்படங்கள், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி இருப்பதை கண்டு பிரதீபா அதிர்ச்சி அடைந்தார். பிரதீபாவின் தாயாரின் படங்களும் அதில் இருந்தன. விகாசின் லேப்டாப்பை பிரதீபா பயன்படுத்திய போது இதை கண்டுபிடித்தார்.

    அந்த படங்களை விகாஷ் தமிழகத்தில் உள்ள தன்னுடைய நெருங்கிய நண்பர்களுக்கு பகிர்ந்திருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரதீபா, அவரிடம் சண்டை போட்டு தட்டிக்கேட்டார்.

    அப்போது விகாஷ், 'நான் தான் போலி கணக்கு தொடங்கி விளையாட்டுக்காக அதை பகிர்ந்தேன். திருமணம் செய்யப்போவதால் 2 வருடம் உறவில் இருந்ததாக வேடிக்கையாக வெளியிட்டேன்' என்று சாதாரணமாக பதில் அளித்தார். விகாசின் இந்த செயலால் பிரதீபா ஆத்திரம் அடைந்தார்.

    தான் காதலனால் ஏமாற்றப்பட்டது குறித்து பிரதீபா தனது சக நண்பர்கள் சுஷீல், கவுதம், சூர்யா ஆகியோரிடம் தெரிவித்தார். விகாசுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று உதவி கேட்டார்.

    இந்த நிலையில் பிரதீபா கடந்த 10-ந்தேதி விகாசை அழைத்துக்கொண்டு பெங்களூர் மைக்கோ லே அவுட் பகுதியில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்றார். அங்கு பிரதீபாவின் நண்பர்கள் சுஷீல், கவுதம், சூர்யா ஆகியோர் இருந்தனர். அங்கு நண்பர்கள் மது அருந்தினர். பின்னர் பிரதீபாவின் அந்தரங்க படத்தை வெளியிட்டது தொடர்பாக விகாசிடம் பிரதீபாவின் நண்பர்கள் தட்டிக் கேட்டனர். அப்போது அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த பிரதீபா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து தரை துடைக்கும் மாப் கட்டை, தண்ணீர் பாட்டில் போன்றவற்றால் விகாசின் முகத்தில் சுமார் அரைமணிநேரம் கடுமையாக தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த விகாஷ் மயங்கி விழுந்தார். பின்னர் பிரதீபா அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

    மர்மநபர்கள் யாரோ விகாசை தாக்கிவிட்டு சென்றிருக்கலாம் என்று பிரதீபா போலீசாரிடமும், விகாஷ் குடும்ப உறுப்பினர்களிடமும் தெரிவித்தார். பிரதீபா, விகாசை திருமணம் செய்யப்போகிற பெண் என்பதால் போலீசாருக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் சந்தேகம் ஏற்படவில்லை.

    இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட விகாஷ் கடந்த 14-ந்தேதி உயிரிழந்தார். இதையடுத்து விகாசின் சகோதரர் விஜய் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் பிரதீபாவின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் போலீசாரிடம் அளித்த தகவல்களும் முன்னுக்குப்பின் முரணாக இருந்தது. இதையடுத்து பிரதீபாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது நடந்த தகவல்கள் அனைத்தையும் பிரதீபா போலீசாரிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து விகாசை அடித்து கொலை செய்ததாக அவரது காதலி பிரதீபா, நண்பர்கள் சுஷில், கவுதம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய சூர்யா தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ×