என் மலர்
நீங்கள் தேடியது "Ganda Shashti festival is going on for 6 days."
- இன்று மாலை 4.30 முதல் மாலை 6.30 மணி வரை நடக்கிறது
- தங்க கவசத்தில் சுப்பிரமணியசாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்
வேலூர்:
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் முருகர் கோவில்களில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா இன்று நடக்கிறது.தீபாவளிக்கு மறுநாள் தொடங்கி 6 நாட்கள் கந்த சஷ்டி விழா நடக்கிறது. இந்நாட்களில் கந்த சஷ்டி விரதத்தை மக்கள் அனுசரிக்கின்றனர். குறிப்பாக குழந்தை பேறு வேண்டியும், முருகனைப் போன்று குழந்தை பிறக்க வேண்டியும் சஷ்டி விரதம் அனுசரிக்கின்றனர்.
கந்த சஷ்டி விழா
அதேப்போல் மேற்கண்ட 6 நாட்களும் எல்லா முருகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள், லட்சார்ச்சனை, திருவிளக்கு பூஜைகளுடன் 6-வது நாள் மாலையில் சூரசம்ஹாரம் நடக்கிறது. இந்த ஆண்டு கந்த சஷ்டி விரதம் கடந்த 25-ந் தேதி தொடங்கியது.
இதையொட்டி வேலூர் மாவட்டத்தில் வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில், காங்கேயநல்லூர் சுப்பிரமணியசாமி கோவில், தோட்டப்பாளையம் தாரகஸ்வரர் கோவில், வள்ளிமலை சுப்பிரமணிய சாமி கோவில், பாலமதி குழந்தை வேலாயுதபாணி கோவில், தீர்த்தகிரி முருகன் கோவில், அரியூர் திருமலைக்கோடி சுப்பிரமணியசாமி கோவில், தார்வழி மயிலாடும் தணிகை மலை முருகன் கோவில், மகா தேவமலை கோவில், சாத்து மதுரை முருகன் கோவில் என அனைத்து முருகன் கோவில்களிலும் கந்த சஷ்டி முன்னிட்டு கடந்த 25-ந் தேதி முதல் சிறப்பு வழிபாடுகளும் லட்சார்ச்சனையும் நடந்தன.
அதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரத்தினகிரி பாலமுருகன் கோவில், திமிரி குமரகிரி முருகன் கோவில், சோளிங்கர் ஞானமலை முருகன் கோவில்களிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் கைலாஷகிரி முருகன் கோவில், திருப்பத்தூர் பசலை குட்டை முருகன் கோவில்களிலும், திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் ரெட்டிபாளையம் தம்டக்கோடி முருகன் கோவிலில் இன்று மாலை 4.30 முதல் மாலை 6.30 மணி வரை சூரசம்ஹார விழா நடக்கிறது.
அதேபோல் போளூர் குன்னத்தூர் பழனியாண்டவர் கோவில், கலசப்பாக்கம் நட்சத்திர கோவில் என அனைத்து முருகன் கோவில்களிலும் இன்று சூரசம்ஹார விழா நடக்கிறது.
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சாமிக்கு இன்று காலை 7.30 மணி அளவில் விசேஷ அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தங்க கவசத்தில் சுப்பிரமணியசாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காலை 11.30 மணிக்கு தீபாராதனை நடந்தது.
மாலை 3 மணி அளவில் வாணியர் வீதி கனக துர்க்கை அம்மன் கோவிலில் பராசக்தியிடம் சக்தி வேலை வாங்கும் முருகர் முக்கிய வீதிகள் வழியாக வந்து மாலை 6.30 மணி அளவில் கோட்டை மைதானத்தை அடைகிறார் அங்கு சூரசம்ஹாரம் நடக்கிறது.
நிகழ்ச்சிக்கு ரத்தினகிரி பாலமுருகனடிமை சாமிகள், கலவை சச்சிதானந்த சாமிகள், நாராயண பீடம் சக்தி அம்மா ஆகியோர் தலைமை தாங்குகின்றனர்.






