என் மலர்
நீங்கள் தேடியது "Farmers should not be forced to provide"
- உர விற்பனையாளர்களுக்கு வேளாண்மை அதிகாரி அறிவுரை
- விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலை:
கூடுதல் இணைப் பொருட்கள் விவசாயிகளுக்கு கட்டாயப்படுத்தி வழங்கக் கூடாது என்று உர விற்பனையாளர்களுக்கு வேளாண்மை இணை இயக்குனர் பாலா அறிவுரை வழங்கி உள்ளார்.
ஒருங்கிணைப்பு கூட்டம்
திருவண்ணாமலை வட்டாரத்தில் உரங்கள் தொடர்பாக வரும் புகார்களை நிவர்த்தி செய்வது மற்றும் விவசாயிகளுக்கு உரங்கள் இடையூறின்றி விநியோகம் செய்வது தொடர்பான திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை துறை சார்பில் ஒருங்கிணைப்பு கூட்டம் திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வேளாண்மை இணை இயக்குனர் பாலா தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
உர உரிமம் பார்வைக்கு படும் படி வைக்கப்பட வேண்டும். உர உரிமம் காலாவதி ஆகும் முன் புதுப்பிக்கப்பட வேண்டும். உர உரிமத்தில் அனுமதி பெற்ற இடத்தில் மட்டும் விற்பனை நடைபெற வேண்டும். உரம் இருப்பு, விற்பனை விலை குறித்த தகவல் பலகை வைக்கப்பட வேண்டும்.
அரசு நிர்ணயித்த விலைக்கு மிகாமல் உரங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும். கூடுதல் இணைப் பொருட்கள் விவசாயிகளுக்கு கட்டாயப்படுத்தி வழங்கக் கூடாது. கொள்முதல் பட்டியல் இல்லாத பொருட்களை விற்பனை செய்யக் கூடாது. அனைத்தும் உர நிறுவனங்களின் பிரதிநிதிகளும் வேளாண்மை இயக்குனரின் மாதாந்திர இலக்கின்படி உரங்களை விநியோகம் செய்ய வேண்டும்.
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இலக்கின் படி கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும் மற்றும் மொத்த, சில்லரை உர விற்பனை நிலையங்களுக்கும் மாதாந்திர இலக்கினை முழுமையாக விநியோகம் செய்ய வேண்டும். மேலும் மாத இறுதி வரை உரங்களை விநியோகம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
விவசாயிகள் மண் பரிசோதனையின் அடிப்படையில் வழங்கப்படும் மண்வள அட்டையை பயன்படுத்தி தங்களின் சாகுபடி பரப்பிற்கு தேவையான அளவு உரங்களை மட்டுமே வாங்க வேண்டும். உரம் வாங்க செல்லும் போது தங்களுடைய ஆதார் அட்டை நகல் மற்றும் அடங்கல் நகலினை எடுத்து சென்று உரங்களை பெற்று கொள்ள வேண்டும்.
விவசாயிகள் உரம் பெறுவதில் இடையூறுகள் ஏற்பட்டால் அதற்கான காரணங்களை எழுத்துப்பூர்வமாகவோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்திலும் மற்றும் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்திலும் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் வேளாண் அதிகாரிகள், உர நிறுவனங்களின் பிரதிநிதிகள், மொத்த மற்றும் சில்லரை உர விற்பனையாளர்கள், கூட்டுறவுத் துறை இணைப்பதிவாளர், டான்பெட் மண்டல மேலாளர், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலாளர்கள் மற்றும் விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.






