search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Excavation measurement work"

    • வெம்பக்கோட்டையில் 2-ம் கட்ட அகழாய்வுக்கு அளவிடும் பணி நடந்து வருகிறது.
    • புதிதாக 18 குழிகளில் ஆய்வு செய்ய அளவீடு செய்து, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    சிவகாசி

    சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை விஜய கரிசல்குளத்தில் முதல் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த ஆண்டு செப்டம்பரில் முடிந்தது. 2-ம் கட்ட அகழாய்வு பணிக்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை சுத்தம் செய்து அளவீடு செய்து தயார் நிலையில் வைத்துள்ளனர். இங்கு ஒரு ஏக்கரில் தோண்டப்பட்ட 16 குழிகளில் பல நிறங்களில் பாசி மணிகள், சுடுமண்ணால் ஆன விளையாட்டு வட்ட சில்லுகள், சங்கு வளையல்கள், சூதுபவளம், தக்களி, பானை, பொம்மைகள், அகல் விளக்கு, புகை பிடிப்பான் கருவி, யானை தந்தத்தால் ஆன அணிகலன், டெரகோட்டாவால் ஆன குழந்தைகள் விளையாட்டு குவளை, மனித பொம்மை ஆகியவை கிடைத்தது.

    மேலும் திமில் உடைய காளையின் சிற்பம், பெண் சிற்பம், குழந்தைகள் விளையாடும் பொம்மை, வணிக முத்திரை, செப்பு நாணயம், விலங்குகளின் எலும்புகள், கொம்பு, கோடாரி கருவிகள், தங்க அணிகலன் என 3 ஆயிரத்து 254 அரிய பொருட்கள் கிடைத்தன. இரண்டாம் கட்ட அகழாய்வு பணிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. தேர்வு செய்யப்பட்ட 3 ஏக்கர் இடத்தை தொல்லியல் துறையினர், வருவாய் துறையினருடன் அளவீடு செய்தனர். புதிதாக 18 குழிகளில் ஆய்வு செய்ய அளவீடு செய்து, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் பொன்னுசாமி கூறுகையில், 2-ம் கட்ட அகழாய்வு பணிக்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் சுத்தம் செய்து, அளவீடு செய்யும் பணி முடிந்துள்ளது. தொல்லியல் துறை அமைச்சர், ஆணையர் உத்தரவுக்கு பின் இந்த மாத இறுதி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் 2-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கும் என்றார்.


    ×