என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Erode lorry strike"

    ஈரோடு மாவட்டத்தில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்து ஸ்டிரைக்கில் கலந்து கொள்வதாக முடிவு செய்துள்ளனர். #Lorrystrike

    ஈரோடு:

    தினசரி டீசல் விலை உயர்வு, 3-ம் நபர் காப்பீட்டு தொகை கட்டணம் 26 சதவீதம் அதிகரிப்பு ஆகியவற்றை வாபஸ் பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 20-ந் தேதி முதல் தேசிய அளவிலான காலவரையற்ற லாரி ஸ்டிரைக் நடக்கிறது.

    அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அறிவித்துள்ள இந்த போராட்டத்துக்கு ஈரோடு மாவட்ட லாரி உரிமையாளர் சங்கம் ஆதரவு தெரிவித்து உள்ளது.

    இந்த சங்கத்தை சேர்ந்தவர்கள் கூறும்போது, ‘‘எங்கள் சங்கத்தை சார்ந்த 5 ஆயிரம் லாரிகள் ஈரோடு மாவட்டத்தில் இயக்கப்படுகிறது. இந்த லாரிகள் அனைத்தும் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபடும்’’ என்று கூறினர்.

    இதேபோல ஈரோடு கல், மணல், மண் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரும் போராட்டத்தில் பங்கேற்கிறார்கள். அவர்கள் வருகிற 20-ந் தேதி மட்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்து உள்ளனர்.

    பெருந்துறை லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்து ஸ்டிரைக்கில் கலந்து கொள்வதாக முடிவு செய்துள்ளனர்.

    இது பற்றி அந்த சங்கத்தை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

    மாநில அளவிலான லாரி உரிமையாளர்கள் சம்மேளன கூட்டம் நாமக்கல்லில் நடை பெற்றது. ஆல் இந்தியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் கோரிக்கையின் படி நடைபெற்ற இந்த கூட்டத்தில் பெருந்துறை லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வருகிற 20-ந் தேதி முதல் நடைபெறும் காலவரையற்ற லாரி ஸ்டிரைக்கில் பெருந்துறை லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மற்றும் சென்னிமலை, வெள்ளோடு, ஈங்கூர், காஞ்சிக்கோவில், நசியனூர், ஊத்துக்குளி விஜயமங்கலம் பகுதி லாரி உரிமையாளர்கள் மற்றும் பெருந்துறை பகுதி வேன் உரிமையாளர்கள் கலந்து கொண்டு தங்களது வாகனங்களை இயக்காமல் நிறுத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பெருந்துறை அடுத்த சிப்காட் வளாகத்தில் இயங்கும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்பட சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரி மற்றும் வேன்கள் இயங்காது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். #Lorrystrike

    ×