என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "End of the problem"

    • த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி
    • சட்டம் ஒழுங்கு முறையாக இல்லை என குற்றச்சாட்டு

    வேலூர்:

    வேலூரில் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு போட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணியின் பணபலம், அதிகார பலத்தையும் கடந்து அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் சுமார் 44 ஆயிரம் வாக்குகள் அளித்திருப்பது சாதாரண மக்களின் வாக்குகள் இன்னும் அ.தி.மு.க கூட்டணியின் பக்கம் இருப்பதையே காட்டுகிறது.

    இதன்தொடர்ச்சியாக, அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும், அதன்பிறகு வரக்கூடிய தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் எதிரணியை வீழ்த்தி வெற்றி பெறக்கூடிய சூழ்நிலையை அ.தி.மு.க, பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகள் முதலிலேயே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

    அதேசமயம், தற்போது பா.ஜ.க.வில் இருந்து நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் சேர்வது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஒரு கட்சியில் இருந்து நிர்வாகிகள் வேறு கட்சிக்கு செல்வது வழக்கமானதுதான். ஆனால், கூட்டணிக்கு உள்ளேயே கட்சி மாறுவது உகந்ததல்ல என்பதை அவர்கள் உணர வேண்டும். எனவே, அதிமுக, பாஜக பிரச்னைக்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    தமிழகத்தில் அ.தி.மு.க 2-வது பெரிய கட்சி அல்ல, அதுதான் முதல் கட்சியும் முதன்மையான கட்சியுமாகும். அதேபோல், இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் நிலையை வடமாநிலங்களில் நடந்து முடிந்த தேர்தல்கள் எடுத்துக்காட்டியுள்ளன. அந்தவகையில், மத்திய பாஜக மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இவ்வாய்ப்பை தமிழக மக்கள் நலனுக்காக கூட்டணி கட்சிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    தமிழக மக்கள் அரசியலையும், அரசியல் வாதிகளையும் நன்கு புரிந்து வைத்துள்ளனர். அந்தவகையில், திமுக ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது அரசியல் லாபத்துக்கானது என்பதை உணர்ந்துள்ளனர்.

    தமிழகத்துக்கு வரும் வடமாநில தொழிலாளர்கள் மீதான அச்சுறுதல்களை தடுக்க தமிழக அரசு மேற்கொண்டுள்ள பணி தாமதமானதாகும். உளவுத்துறை இன்னும் விழிப்புடன் செயல்பட்டிருக்க வேண்டும்.

    தற்போது தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களின் பங்கு எல்லா துறைகளிலும் முக்கியம் என்றாகிவிட்டது. வருங்காலங்களில் வடமாநிலத் தொழிலா ளர்களுக்கு பாதுகாப்பை அரசு உறுதி செய்திட வேண்டும்.

    எந்த பணியாக இருந்தாலும் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும், அதன் பிறகு மற்ற மாநிலத்தவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முறையாக இல்லை. கொலை, கொள்ளை, திருட்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அரசின் கடமை. நெய்வேலி அனல்மின்நிலையத்திற்கு மேலும் நிலம் கையகப்படுத்தக்கூடாது. ஏற்கனவே நிலம் கையகப்படுத்திய வர்களுக்கு 100 சதவீதம் வேலை வாய்ப்பு அளித்து பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகள் தீர்வு காண வேண்டும்.

    கடலோரங்களில் கச்சா எண்ணை கசிவதால் மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க குறைந்த காலத்தில் அந்த குழாய்களை சரிசெய்து நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும்.

    மகளிர்தான் நாட்டின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாகும். மத்திய, மாநில அரசுகள் மகளிருக்கு அளிக்க வேண்டிய சலுகைகளை உரிய காலத்தில் அளித்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும்.

    அதேசமயம், மகளிர் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இது அரசியல் கிடையாது. தனிமனித ஒழுக்கத்தை ஏற்படுத்த வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும்.

    தவறு செய்ப வர்களுக்கு குறுகிய காலத்தில் தூக்கு தண்டனை வழங்க வேண்டும். சூதாட்ட பிரச்னைகளுக்கு முடிவு கட்டவில்லை என்றால் அது எந்த ஆட்சியாக்கும் நல்லதல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது வேலூர் மாநகர மாவட்ட தலைவர் ஆர்.கே.மூர்த்தி உள்பட பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்.

    ×