என் மலர்
நீங்கள் தேடியது "Drivers strike suddenly"
- கோட்டை நுழைவாயிலில் ஆட்டோக்களை நிறுத்த தடை விதித்ததால் ஆத்திரம்
- தொல்லியல் துறையிடம் அனுமதி கடிதம் பெற நடவடிக்கை
வேலூர்:
வேலூர் கோட்டையில் இருந்த காதல் ஜோடிகளை மிரட்டி சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இது சம்பந்தமாக சிறுவன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வேலூர் கோட்டை நுழைவாயில் காந்தி சிலை அருகே ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல போலீசார் தடை விதித்தனர். இதனால் கடந்த சில நாட்களாக ஆட்டோக்கள் நிறுத்தப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் காந்தி சிலை அருகே ஆட்டோவை இயக்கி வந்த டிரைவர்கள் இன்று காலை சாரதி மாளிகை மேம்பாலத்தின் கீழ் வரிசையாக ஆட்டோக்களை நிறுத்தி சாலையோரம் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் யாரும் பேச்சுவார்த்தை நடத்தாததால் அவர்களாகவே மீண்டும் ஆட்டோக்களை எடுத்துச் சென்று காந்தி சிலை அருகில் நிறுத்தினர்.
இதனைக் கண்ட போலீசார் இங்கு ஆட்டோக்களை நிறுத்த அனுமதி இல்லை என்றனர். அப்போது ஆட்டோ தொழிலாளர்கள் நாங்கள் வேறு எங்கு ஆட்டோவை நிறுத்த முடியும். எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது. எனவே இங்கு ஆட்டோக்களை நிறுத்த அனுமதிக்க வேண்டும் என்று முறையிட்டனர்.
பின்னர் போலீசார் நீங்கள் தொல்லியல் துறையிடம் ஆட்டோக்களை நிறுத்த ஆட்சேபனை இல்லை என கடிதம் வாங்கி வந்தால் மட்டுமே ஆட்டோக்களை நிறுத்த அனுமதிக்கப்படும் என தெரிவித்தனர்.
இதையடுத்து ஆட்டோ டிரைவர்கள் தொல்லியல் துறையிடம் அனுமதி கடிதம் பெரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஆட்டோ டிரைவர்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






