search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drenched in Rain Water"

    • மழை நீர் மூழ்கி சம்பா நேரடி விதைப்பு நெற்பயிரை வேளாண் உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.
    • இளம் நாற்றுகள் பாதிக்கப்பட்டிருக்கும் இடங்களில் அதே ரக நாற்றுகளைக் கொண்டு நடவு செய்ய வேண்டும்.

    சீர்காழி:

    கொள்ளிடம் அருகே அளக்குடி, ஆச்சாள்புரம்,மகாராஜபுரம்,நல்லூர், பச்சபெருமாள் நல்லூர், நல்ல நாயகபுரம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீர் மூழ்கி பின்னர் வடிந்த நிலையில் உள்ள சம்பா நேரடி விதைப்பு நெற்பயிரை கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குனர் எழில்ராஜாநேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நல்ல விநாயகபுரம் கிராமத்தில் தண்ணீரில் மூழ்கி பின்னர் வடிந்த நிலையில் நெற்பயிரை பார்வையிட்ட எழில்ராஜா எப்படி காப்பாற்றுவது என்பது குறித்து விவசாயிகளிடம் விளக்கம் அளித்து பேசுகையில் ,

    சமீபத்தில் பெய்த மழையால் சம்பா தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது.வயல்களில் தேங்கியுள்ள அதிகப்படியான மழைநீரை முதலில் வெளியேற்ற வேண்டும்.

    இளம் நாற்றுகள் பாதிக்கப்பட்டிருக்கும் இடங்களில் அதே ரக நாற்றுகளைக் கொண்டு நடவு செய்ய வேண்டும். வடிகால் வசதியின்றி முழுமையாக பாதிக்கப்பட்ட வயல்களில் குறுகிய கால நெல் இரகங்களை சாகுபடி செய்யலாம்.

    தேங்கியுள்ள நீரை வடித்தவுடன் வரிசை நடவு மேற்கொண்ட வயல்களில் கோனோவீடர் அல்லது ரோட்டரிவீடர் கருவி மூலம் மண்ணில் காற்றோட்டத்தை ஏற்படுத்தி வேர்கள் மண்ணில் உள்ள சத்துக்களை எடுத்துக்கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.

    நீர் வடிந்த பிறகு பயிரின் வளர்ச்சி சரியாக இல்லாத இடங்களில் வளர்ச்சியை மேம்படுத்த ஒரு ஏக்கருக்கு 22 கிலோ யூரியா. 18 கிலோ ஜிப்சம், 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து ஒரு நாள் இரவு வைத்திருந்து இத்துடன் 17 கிலோ மியூரியேட்ஆப்பொட்டாஷ் கலந்து வயலில் சீராக தூவ வேண்டும்.

    இந்த உரங்களை இடும்பொழுது வயலில் சீராக தண்ணீர் வைத்துக்கொள்வதுடன் நீர் வெளியேறாதவாறு பராமரிக்க வேண்டும்.

    பயிரின் வளர்ச்சி மிகவும் குன்றி, துத்தநாக சத்து குறைபாடு தென்பட்டால் உடனடியாக ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ யூரியா, 1 கிலோ ஜிங்க் சல்பேட் கரைத்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.மழைக்காலங்களில் நீர்தேங்கி நின்ற வயல்களில் இலை வழி உரத்தெளிப்பு சிறந்த பலனை தரும். நானோ யூரியா ஏக்கருக்கு 250 மில்லியை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.

    இப்ப பருவமழை காலத்தில் போதிய சூரிய வெளிச்சம் இல்லாததாலும் குளிர்ச்சியான சீதோஷ்ன நிலையாலும் மண்ணின் வெப்பநிலை குறைவாக காணப்படுவதாலும் நெற்பயிரில் போதிய சத்துக்களை வேர் வழியாக எடுத்துக் கொள்ள முடியாது.

    இத்தருணத்தில் ஏக்கருக்கு 2 கிலோ யூரியா, 2 கிலோ டி.ஏ.பி மற்றும் 2 கிலோ மியூரி பேட் ஆப் பொட்டாஷ் 200 லிட்டர் நீரில் கலந்து காலை அல்லது மாலை வேளையில் தெளிக்க வேண்டும் என்றார்.

    ×