search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "doctor cellphone theft"

    கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளி போல் சென்று டாக்டரின் செல்போனை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் மற்றும் நர்சுகளின் செல்போன்கள் தொடர்ந்து காணாமல் போனது. இதேபோல் கடந்த 12-ந் தேதி அவசர சிகிக்சை பிரிவில் இருந்த டாக்டர் ஒருவரின் விலைஉயர்ந்த செல்போனை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இதையடுத்து அவசர சிகிக்சை பிரிவில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிளை போலீசார் பார்த்தனர். அதில் ஒரு காட்சி பதிவாகி இருந்தது. கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவுக்கு கடந்த 12-ந் தேதி மதியம் ஒரு டிப்-டாப் வாலிபர் உள்ளே வருகிறார்.

    பணியில் இருந்த பெண் டாக்டர் ஒருவர் மேஜை மீது செல்போனும், வாட்டர் பாட்டிலும் வைத்து விட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறார். அப்போது நோயாளியாக வந்த அந்த மர்ம வாலிபர் நாற்காலியில் அமர்கிறார்.

    டாக்டர் எழுந்து வேறு ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அந்த வாலிபர் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மேஜை மீதிருந்த செல்போனை எடுத்து தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு பதட்டமில்லாமல் நடந்து செல்கிறார்.

    சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்த அந்த வாலிபரின் அடையாளத்தை வைத்து அவரை போலீசார் பிடித்தனர். அந்த நபர் கடலூர் கம்மியம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் அவர் மதுவுக்கு அடிமையானவர் என்றும், குடிப்பதற்கான செலவுக் காகவே அவர் திருடுகிறார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

    மேலும் அந்த வாலிபர் பற்றி விசாரித்ததில் கடலூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கைவரிசைகளைக் காட்டியுள்ளதும், சமீபத்தில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் திருட முயன்றபோது பிடிபட்ட அவருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்துள்ளதும் தெரியவந்தது.

    ×