என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Desingu Raja Rani Memorial"

    • ராணிப்பேட்டை பாலாற்றங்கரையில் உள்ளது
    • சிதலமடைந்த இடத்தினை புனரமைக்க வலியுறுத்தல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை நகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் நகராட்சி திருமண மண்டபம் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் 1994-ம் ஆண்டு கட்டப்பட்டு 1996-ம் ஆண்டு மக்கள் குறைந்த வாடகையில் திருமணங்கள் பொது நிகழ்ச்சிகள் நடத்திட பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

    இந்த மண்டபம் தனியார் ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டு நகராட்சிக்கு ஆண்டு வருமானம் செலுத்தப்பட்டு வந்தது. சுமார் 15,817 சதுர அடி பரப்பளவில் இந்த மண்டபம் அமைந்துள்ளது. தரைதளம் மற்றும் முதல் தளம் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது.

    மேலும் மண்டபத்தின் வெளியே 11 கடைகள் வாடகைக்கு விடப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. கடந்த 4 வருடங்களுக்கு முன்னதாக ஒப்பந்த அடிப்படையில் பராமரித்து வந்த ஒப்பந்ததாரர் இறந்து விட்டதால் வாடகை பாக்கி செலுத்தாமல் மண்டபம் பயன்பாடு இல்லாமல் இருந்து வந்தது.

    இந்த திருமண மண்டபத்தை புனரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது மண்டபத்தினை முழுமையாக அகற்றிவிட்டு புதிய கட்டிடம் நவீன வசதிகளுடன் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் திட்ட அறிக்கை தயார் செய்யவும் கலெக்டரிடம் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

    இதனை தொடர்ந்து ராணிப்பேட்டை பாலாற்றங்கரையில் அமைந்துள்ள தேசிங்குராஜா மற்றும் ராணி பாய் சமாதி அமைந்துள்ள இடத்தை பார்வையிட்டு சிதலமடைந்த இடத்தினை புனரமைத்து போதிய வழிகாட்டி பலகைகள் மற்றும் தேசிங்கு ராஜா மற்றும் ராணி பாதை வரலாறுகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் பதாகைகள் அமைத்து உரிய மரியாதை வழங்கிடும் வகையில் இந்த இடத்தினை மேம்படுத்திட வேண்டும் என கலெக்டரிடம் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

    இந்த சமாதி அமைந்துள்ள இடம் மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே இதனை முழுவதையும் சீரமைக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.

    மேலும் திட்ட அறிக்கை தயார் செய்து அரசுக்கு தகவல் தெரிவித்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் உத்தரவிட்டார்.

    ஆய்வின் போது நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், நகராட்சி ஆணையாளர் ஏகராஜ், நகர மன்ற துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா மற்றும் நகர செயலாளர் பூங்காவனம், நகரமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணன், வினோத் மற்றும் நகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×