search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Denied ticket"

    மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ ஒருவர், கட்சி அலுவலகத்தில் இருந்து 300 நாற்காலிகளை எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #LokSabhaElections2019
    அவுரங்காபாத்:

    மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து பாராளுமன்றத் தேர்தலை சந்திக்கின்றன. இதற்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், அவுரங்காபாத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று தேர்தல் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கூட்டத்திற்கு கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரசுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கூட்டத்திற்காக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் வந்தவண்ணம் இருந்தனர். அப்போது காங்கிரஸ் எம்எல்ஏ அப்துல் சத்தாரின் (சில்லோடு தொகுதி) ஆதரவாளர்கள் சிலர், அங்கிருந்த 300 நாற்காலிகளை எடுத்து வாகனத்தில் ஏற்றினர்.

    அவர்களிடம் விசாரித்தபோது, “இந்த நாற்காலிகள் அனைத்தும், எம்எல்ஏ சத்தார், கட்சி கூட்டங்களுக்காக வாங்கி கொடுத்தவை. அவர் சொன்னதால் இப்போது எடுத்துச் செல்கிறோம்” என்றனர்.



    நாற்காலிகளை சத்தார் ஆதரவாளர்கள் எடுத்துச் சென்றதால், ஆலோசனைக் கூட்டம் தேசியவாத காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது.

    இதுபற்றி சத்தார் கூறுகையில், “அந்த நாற்காலிகள் அனைத்தும் நான் கட்சி கூட்டங்களுக்காக வாங்கிக் கொடுத்தவை. இப்போது நான் கட்சியில் இருந்து விலகிவிட்டேன். அதனால் என்னுடைய நாற்காலிகளை நான் திரும்ப எடுத்துக்கொண்டேன். போட்டியிட வாய்ப்பு கிடைத்தவர், பிரசாரத்திற்கான ஏற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும்” என்றார்.

    கட்சியின் முன்னணி தலைவரான சத்தார், தனக்கு அவுரங்காபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால், கடைசி நேரத்தில், எம்எல்சி சுபாஷ் ஜாம்பத்துக்கு சீட் வழங்கப்பட்டது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த சத்தார், கட்சியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார்.

    இதுபற்றி கருத்து தெரிவித்த வேட்பாளர் ஜாம்பத், “சத்தாருக்கு நாற்காலிகள் தேவைப்பட்டதால் எடுத்துச் சென்றிருக்கலாம். இதனால் எங்களுக்கு எந்த மனவருத்தமும் இல்லை. அவர் இன்னமும் காங்கிரசில்தான் இருக்கிறார். அவரது ராஜினாமா இதுவரை ஏற்கப்படவில்லை” என்றார். #LokSabhaElections2019 
    ×