search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "delhi woman molestation"

    கும்பகோணத்தில் டெல்லி பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாக இருந்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். #delhiwomanmolestation #autodriverarrested

    கும்பகோணம்:

    டெல்லியை சேர்ந்த 23 வயது இளம்பெண் கடந்த 2-ந்தேதி வங்கி பணி பயிற்சிக்காக கும்பகோணத்துக்கு ரெயில் மூலம் வந்தார்.

    ஓட்டலுக்கு செல்வதற்காக அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி ஏறினார். அந்த ஆட்டோ டிரைவர், இளம்பெண் செல்ல வேண்டிய ஓட்டலுக்கு செல்லாமல் நகர் முழுவதும் சுற்றி வந்தார். சந்தேகம் அடைந்த இளம்பெண், ஆட்டோ டிரைவரிடம் கேட்டதற்கு வாக்குவாதம் செய்து செட்டிமண்டபம் பைபாஸ் ரோட்டில் நள்ளிரவில் இறக்கி விட்டு சென்று விட்டார்.

    நள்ளிரவில் தனியாக நடந்து வந்த இளம் பெண்ணை பார்த்ததும் அங்கு நின்ற 2 வாலிபர்களுக்கு சபலம் ஏற்பட்டது. இளம்பெண்ணிடம் நைசாக பேசி, மோட்டார் சைக்கிளில் ஓட்டலுக்கு அழைத்து செல்கிறோம் என்று கூறினர். இதை நம்பி இளம்பெண்ணும் அவர்களுடன் சென்றார்.

    2 வாலிபர்களும், இளம்பெண்ணை ஆள்நட மாட்டமில்லாத இடத்துக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். தனது நண்பர்கள் 2 பேருக்கும் செல்போன் மூலம் பேசி அழைத்தனர். 4 வாலிபர்களும் அந்த இளம் பெண்ணை கற்பழித்தனர்.


    பிறகு 4 பேரும், ஆட்டோவில் இளம்பெண்ணை ஓட்டல் அருகே கொண்டு விட்டு தப்பி சென்று விட்டனர்.

    இளம்பெண்ணை கற்பழித்த வழக்கில் கும்பகோணம் பகுதியை சேர்ந்த வசந்த், தினேஷ், புருசோத்த மன், அன்பரசன் ஆகிய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இதில் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய போது காலில் காயம் அடைந்த வசந்த், தினேஷ் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கற்பழிப்பு வழக்கில் கைதான 4 பேருக்கும் ஆஸ்பத்திரியில் ஆண்மை பரிசோதனை நடந்தது.

    இந்த வழக்கில் ரெயில் நிலையத்தில் இருந்து டெல்லி இளம்பெண்ணை அழைத்து சென்ற ஆட்டோ டிரைவர் யார்? அவர் எதற்காக ஒரு மணி நேரம் ஆட்டோவில் வைத்து சுற்றினார் என்பது புரியாத புதிராக இருந்து வந்தது.

    ஆட்டோ டிரைவர் ஒரு வாரமாக தலைமறைவாக இருந்து போலீசுக்கு டிமிக்கி கொடுத்து கொண்டு இருந்தார். போலீசார், ஆட்டோ டிரைவரை பிடிக்க தீவிரம் காட்டினர்.


    ரெயில் நிலைய பகுதியில் காமராஜர் சாலை, புதிய பஸ் நிலைய பகுதி மற்றும் நகரின் முக்கிய இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர்.

    கும்பகோணத்தில் உள்ள 400-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களிடம் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

    அப்போது ஒரு ஆட்டோ ஸ்டாண்டில் இருந்த ஆட்டோ டிரைவர் மட்டும் வித்தியாசமாக தனது ஆட்டோவின் முன் பக்கத்தில் இருந்த பம்பர், ஹாரன், மற்றும் கண்ணாடியை மாற்றி பழைய ஆட்டோவைப் போல் டிசைன் செய்து இருந்தார். இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

    அந்த ஆட்டோ யாருடையது என்று போலீசார் விசாரித்தனர். பக்கத்து ஊர்களிலும் சென்று ஆட்டோவை தேடினர்.

    அப்போது திருவிடைமருதூர் திருப்பணிபேட்டை யில் அந்த ஆட்டோ நின்று இருந்தது. அதை போலீசார் கைப்பற்றினர். அதன் டிரைவர் குருமூர்த்தி (வயது25) என்பவரை நள்ளிரவில் போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கும்பகோணம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    அவர் போலீசாரிடம் கூறுகையில், “சம்பவத்தன்று ரெயில் நிலையத்தில் சவாரியை இறக்கி விட்டு திரும்பியபோது இளம்பெண் ஆட்டோவை நிறுத்தி ஓட்டலில் விடுமாறு ஆங்கிலத்தில் கூறினார். நானும் அவர் சொன்னபடி ஆட்டோவில் ஏற்றிச் சென்றேன். வழியில் தகராறு ஏற்பட்டதால் நடுவழியில் இறக்கி விட்டதாக ஒப்புக் கொண்டார்.

    கண்காணிப்பு கேமிரா மூலம் ஆட்டோவை போலீசார் தேடுவதை அறிந்து தனது ஆட்டோவின் முன் பகுதியை மாற்றினேன் என்றும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

    இவருக்கு வாலிபர்களுடன் தொடர்பு உள்ளதா? தன்னை நம்பி ஆட்டோவில் ஏறிய பெண்ணை நடுரோட்டில் ஏன் இறக்கி விட்டார்? என்பது குறித்து அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது. #delhiwomanmolestation #autodriverarrested

    ×