என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dawn struggle"

      சேலம்:

      தமிழகம் முழுவதும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் அங்கன்வாடி ஊழியர்கள் உதவியாளர் களை அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடை ரூ.10 லட்ச மும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நேற்று தொடங்கியது.

      சேலத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் வசந்தகுமாரி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாநில துணைத்தலைவர் சரோஜா, மாவட்ட செயலாளர் மனோன்மணி, மாநில செயற்குழு உறுப்பினர் சாவித்திரி உட்பட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.

      காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெகநாதன், உதவி கமிஷனர்கள் வெங்கடேஷ், அசோகன், இன்ஸ்பெக்டர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

      விடிய விடிய நடந்த போராட்டம், இன்று 2-வது நாளாக நீடித்து வருகிறது. இதையொட்டி அந்த பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

      இது குறித்து மாநில துணைத்தலைவர் சரோஜா கூறுகையில், அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருகிறது. பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

      எங்களது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

      நாமக்கல் மாவட்டம்

      நாமக்கல்லில் இதேபோல அங்கன்வாடி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்ட தலைவர் பாண்டிமா தேவி தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

      இதில் அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் ஜெயக்கொடி, சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் வேலுசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். 10 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள அங்கன்வாடி மையங்களை மூடுவதை அரசு கைவிட வேண்டும், ஒரு ஊழியர் கூடுதல் மையங்களை சேர்த்து கவனிக்கும் நிலை உள்ளதால் மனரீதியாக பாதிக்கப்படுகின்றனர்.

      அதனால் காலியாக உள்ள அமைப்பாளர், உதவியாளர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். நிபந்தனை இன்றி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

      இந்த போராட்டம் நேற்று இரவு முழுவதும் நடந்த நிலையில் இன்று காலையும் 2-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் அங்கன்வாடிகளின் சாவிகளையும் அதிகாரி களிடம் ஊழியர்கள் ஒப்படைத்துள்ளனர்.

      இதனால் அங்கன்வாடிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் அங்கன்வாடிகளுக்கு செல்ல முடியாமல் குழந்தைகள் தவித்து வருகின்றனர். மேலும் அங்கன்வாடி பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

      ×