என் மலர்
நீங்கள் தேடியது "Cut with a sharp knife"
- 4 பேர் கைது
- ஜெயிலில் அடைப்பு
கண்ணமங்கலம்:
கண்ணமங்க லம் அடுத்த ஆண்டிப்பாளையம் அருகே உள்ள அருந்ததியர்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 46) முன் னாள் ராணுவ வீரர்.
இவரது மனைவி கவிதா (29), இவர்களுக்கு 2 மகள் ஒரு மகன் உள்ளனர். இதற்கிடையே, மாரிமுத்து, கவிதா தம்பதியருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கவிதா தன் பிள்ளைகளுடன் காட்பாடியில் உள்ள தாய் வீட்டுக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 17-ந் தேதி இரவு 8.15 மணியளவில் மாரிமுத்து தனது வீட்டின் பின்புறம் உள்ள பாத்ரூமில் குளித்துவிட்டு வெளியே வந்துள்ளார்.
அப்போது அடையாளம் தெரியாத 3 பேர் அவரை ஆபாசமாக திட்டியபடி, சரமாரியாக கத்தியால் வெட்டிவிட்டு பின்பக்க வயல்வெளி வழியாக தப்பி ஓடிவிட்டனர்.
மாரிமுத்துவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று பார்த்தபோது, தலை, கை, முதுகு, தொடை என பல இடங்களிலும் வெட்டுக் காயங்களுடன் மாரிமுத்து ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார்.
உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், திருவண்ணாமலை எஸ்.பி. கார்த்திகேயன் உத்தரவின்படி டி.எஸ்.பி. ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை யினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடிவந்தனர்.
சம்பவம் நடந்த இடத்தில் 3 குற்றவாளி களும் விட்டு சென்ற செருப்புகளை சமூக வலைதளங்களில் அனுப்பி துப்பு துலக்க முயற்சித்தனர். சந்தேகத்தின் பேரில் கவிதாவின் செல்போன் அழைப்புகளை சோதனை செய்தனர். அதிலிருந்து சங்கர் என்பவரின் எண்ணுக்கு அதிகமுறை பேசியிருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து சங்கரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவரின் செல்போனிலிருந்த அழைப்புகளை சோதனை செய்தனர். விசாரணையில் கவிதாவுக்கும் சிறுமூரை சேர்ந்த சங்கர்(45) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது.
மாரிமுத்துவை கொன்று விட்டால் அவரது சொத்துக்கள் கவிதாவுக்கு வந்து விடும். அதைக் கொண்டு சொகுசு வாழ்க்கை வாழலாம் என இருவரும் திட்டமிட்டுள்ளனர்.
பின்னர் சங்கரை கொல்ல ரூ.5 லட்சம் பேசி கூலிப்படையை அனுப்பியுள்ளனர்.
சங்கர் கொடுத்த தகவலின் பேரில் அடைய பாளையம் அண்ணாநகரை சேர்ந்த பிரகாஷ்ராஜ்(20), சிறுமூர் வடக்கு கொட்டா மேட்டை சேர்ந்த பாபு(22) மற்றும் கொலை செய்ய கூலிப்படைகளை அனுப்பிய சங்கர் (45), கவிதா ஆகிய 4 பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தலைமறைவான அப்பு(24) என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ராணுவ வீரரை மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை அனுப்பிய சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






