என் மலர்
நீங்கள் தேடியது "continuous sand theft"
- திருச்சுழி குண்டாறு-ஓடைகளில் தொடர் மணல் திருட்டு நடந்துள்ளது.
- 75 மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஓடைகளில் அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் கடத்தப்படுவதாக திருச்சுழி காவல் நிலையத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதனையடுத்து திருச்சுழி டி.எஸ்.பி. ஜெகநாதன் மற்றும் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் திருச்சுழி குண்டாற்றுப் பகுதியிலும், சுற்றுவட்டார ஓடைப்பகுதிகளிலும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது திருச்சுழி அருகே கொட்டம் பகுதியில் உள்ள ஓடையில் அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக சரக்கு வாகனத்தில் சாக்கு மூட்டைகளில் மணல் திருடிக் கொண்டிருந்தது தெரிய வந்தது.
திருட்டு கும்பல் ரோந்து சென்ற போலீசாரைக் கண்டதும் தப்பியோடி விட்டனர். இதனையடுத்து 75 மணல் மூட்டைகளுடன் கூடிய சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் அதனை திருச்சுழி காவல் நிலையம் கொண்டு வந்தனர்.
இதேபோன்று பாறைக்குளம் பகுதியில் உள்ள ஓடையில் மாட்டு வண்டியில் மணல் அள்ளியது தெரிய வந்தது. இதனையடுத்து 1 யூனிட் மணலுடன் கூடிய மாட்டுவண்டியையும் பறிமுதல் செய்து திருச்சுழி காவல் நிலையம் கொண்டு வந்தனர்.
இதுகுறித்து போலீசாரின் தீவிர விசாரணைக்கு பிறகு அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்ட கொட்டம் பகுதியைச் சேர்ந்த வேலு என்பவரது மகன் ஆனந்தராஜ் மற்றும் பாறைக்குளம் பகுதியை சேர்ந்த ராமு என்பவரது மகன் சின்னதம்பி ஆகிய 2பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.






