search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Commercial tax line"

    • தமிழக வணிக வரித்துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.
    • வரி ஏய்ப்பு பெருமளவு தடுக்கப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூரில் 1, 2 என இரண்டு வணிக வரி மாவட்டங்கள் உள்ளன. 9 சரகங்களுடன் வணிக வரி மாவட்டம் 1ம், 7 சரகங்களுடன் வணிக வரி மாவட்டம் 2-ம் இயங்குகின்றன.கோவை கோட்டத்தில் இருந்த திருப்பூர் வணிக வரி மாவட்டம் துறை சார் மறு சீரமைப்பின்போது ஈரோடு கோட்டத்துடன் இணைக்கப்பட்டது.

    திருப்பூர் வருவாய் மாவட்ட பகுதிகளான தாராபுரமும், காங்கயமும், கரூர் வணிக வரி மாவட்டத்திலும், அவிநாசி, கோவை வணிக வரி மாவட்டத்திலும், உடுமலை சரகம், பொள்ளாச்சி வணிக வரி மாவட்டத்திலும் தொடர்கின்றன.இதனால், திருப்பூர் மாவட்ட வர்த்தகர்கள்கோ வை, ஈரோடு, கரூர் என 3 வெவ்வேறு மாவட்டங்களுக்கு அலைய வேண்டியுள்ளது. பின்னலாடை துறையினர், ஆடிட்டர்களின் தொடர் கோரிக்கையை அடுத்து வருவாய் மாவட்ட பகுதிகளை உள்ளடக்கி திருப்பூர் வணிக வரி கோட்டம் அமைக்கப்படும் என தமிழக வணிக வரித்துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

    தற்போது குமரன் ரோட்டில் திருப்பூர் வணிக வரி மாவட்டம் 1க்கான துணை கமிஷனர் அலுவலகம்,குமார் நகரில் வணிக வரி மாவட்டம் 2க்கான துணை கமிஷனர் அலுவலகங்கள் இயங்குகின்றன.வணிக வரி கோட்ட அலுவலகம் இயங்குவதற்காக வாடகை கட்டடம் தேடும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். வணிக வரி கோட்டம் அமையும்போது நிர்வாகம் மற்றும் அமலாக்க இணை கமிஷனர்கள் நியமிக்கப்படுவர்.

    வாகன தணிக்கை, நிறுவனங்களின் அதிரடி சோதனைகள் செய்து, போலி பில், பில் இல்லாமல் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களிடமிருந்து ஏய்ப்பு வரியை வசூலிப்பது அமலாக்க பிரிவின் முக்கிய பணி. இதற்காக அந்த பிரிவு அதிகாரிகளுக்கு வாகனங்கள் வழங்கப்படுகின்றன.அமலாக்க பிரிவுடன் திருப்பூர் வணிக வரி கோட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதை உறுதிப்படுத்தும்வகையில் அமலாக்க பிரிவினரின் பயன்பாட்டுக்காக 6 புதிய பறக்கும் படை வாகனங்கள் திருப்பூருக்கு வந்துள்ளன. அந்த வாகனங்கள் குமார் நகரில் உள்ள வணிக வரி மாவட்டம் 2, துணை கமிஷனர் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.கோவை, ஈரோடு மாவட்ட அமலாக்க அதிகாரிகளே திருப்பூருக்கு வந்து வாகன தணிக்கைகளில் ஈடுபடுகின்றனர். திருப்பூரிலேயே அமலாக்க பிரிவு அமைவதன்மூலம், வாகன தணிக்கை வேகம் பெறும். வரி ஏய்ப்பு பெருமளவு தடுக்கப்படும். அரசுக்கு வரி வருவாய் அதிகரிக்கும் என்கின்றனர் அதிகாரிகள்.

    ×