search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collector Baskara Pandian"

    • 9-ம் வகுப்பு படித்து வந்த மாணவியை விடுதி வசதியுடன் கூடிய மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்க்க கலெக்டர் உத்தரவிட்டார்.
    • மாணவிகளுக்கு தேவையான பொருட்கள், சான்றிதழ்கள் வழங்க வருவாய்த்துறையினருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள மாடப்பள்ளி அண்ணாநகரை சேர்ந்த கணவன், மனைவி கூலி தொழில் செய்து வருகின்றனர். தம்பதிக்கு 3 மகள் மற்றும் ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.

    மூத்த மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. 2-வது மகள் திருப்பத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். 3-வது மகள் அங்குள்ள தொடக்கப்பள்ளியில் படித்து வந்தார். இந்த நிலையில் கணவன்- மனைவி இருவரும் மது போதைக்கு அடிமையானார்கள்.

    வீட்டில் குழந்தைகளுக்கு சரியாக சாப்பாடு கூட கிடைக்கவில்லை. மேலும் பிள்ளைகளுக்கு பள்ளி செல்வதற்கான சீருடை கூட இல்லை. இதனால் பள்ளிக்குச் செல்லாமல் மாணவிகள் வீட்டில் முடங்கினர்.

    இதுகுறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு புகார் வந்தது. இதையடுத்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மாடபள்ளி அண்ணாநகரில் உள்ள தம்பதியின் வீட்டிற்கு சென்றார். கலெக்டர் வந்தபோது வழக்கம் போல கணவன், மனைவி இருவரும் போதையில் இருந்தனர்.

    அவர்களுக்கு கலெக்டர் அறிவுரைகளை வழங்கினார். மேலும் 9-ம் வகுப்பு படித்து வந்த மாணவியை விடுதி வசதியுடன் கூடிய மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்க்க கலெக்டர் உத்தரவிட்டார்.

    அதன்படி மாணவி அந்த பள்ளியில் சேர்க்கப்பட்டார். மேலும் அவரது தங்கையை அங்குள்ள தொடக்கப் பள்ளியில் மீண்டும் கலெக்டர் சேர்த்தார். இரு மாணவிகளும் பள்ளிக்கு புறப்பட்டு சென்றனர்.

    அவர்களுக்கு தேவையான பொருட்கள், சான்றிதழ்கள் வழங்க வருவாய்த்துறையினருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். போதையில் அடிமையான தம்பதியினருக்கு கடன் உதவி செய்யப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

    அவர்கள் முதல் கட்டமாக குடிப்பழக்கத்தை மறக்க மறுவாழ்வு மையத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெற்றோரின் போதையால் வீட்டில் முடங்கிய இரண்டு மாணவிகளை பள்ளியில் சேர்த்த கலெக்டருக்கு அந்த பகுதி மக்கள் பாராட்டு மற்றும் நன்றி தெரிவித்தனர்.

    இதுகுறித்து பள்ளி விடுதியில் சேர்க்கப்பட்ட மாணவி கூறுகையில்:-

    எனது பெற்றோர் கூலி வேலை செய்து வந்தனர். நாளடைவில் அவர்களுக்கு மது குடிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    இதனால் வீட்டில் எங்களுக்கு உணவு கூட கிடைக்கவில்லை. மேலும் பள்ளி செல்வதற்கான சீருடை இல்லை. இதுவரை எங்களுக்கு ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ் ஆகியவை இல்லை. அதனால் பள்ளிக்கு செல்லாமல் நானும் எனது தங்கையும் வீட்டிலேயே முடங்கினோம்.

    கலெக்டர் நடவடிக்கையால் தற்போது மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளோம். இது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களது பெற்றோர் மீண்டும் நல்வழிக்கு திரும்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×