search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "collected plastic"

    முதுமலை வனப்பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகளை கூடலூர் நீதிமன்ற ஊழியர்கள் சேகரித்தனர்.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் இயற்கை எழில் நிறைந்த பகுதி. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வெளியூர்களில் இருந்து ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் முதுமலை-கூடலூர் வழியாகவும், மேட்டுப்பாளையம்-குன்னூர்-கோத்தகிரி வழியாகவும் வருகின்றனர்.

    இவ்வாறு சமவெளி பகுதியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் குப்பைகளை வனப்பகுதியில் ஆங்காங்கே வீசி விட்டு செல்கின்றனர். இதனால் கூடலூரில் இருந்து ஊட்டிக்கு செல்லும் சாலையின் இருபுறமும் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதேபோன்று முதுமலை வனப்பகுதியிலும் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகளவில் வீசப்படுகிறது. இதற்கிடையில் பள்ளிக்கூட மாணவ- மாணவிகள் மற்றும் சமூக அமைப்பினர் வனப்பகுதியில் வீசப்படும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி கூடலூர் நீதிமன்ற ஊழியர்கள் தொரப்பள்ளியில் இருந்து முதுமலை தெப்பக்காடு வரை சாலையோரம் சுற்றுலா பயணிகளால் வீசி எறியப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணியை நீதிபதி தமிழ்செல்வன் தொடங்கி வைத்தார். இதையடுத்து நீதிமன்ற ஊழியர்கள் பல கிலோ மீட்டர் தூரம் சாலையோரம் நடந்து சென்று பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்தனர். அப்போது மதுபாட்டில்கள் அதிகளவில் கிடைத்தன. சில பாட்டில்களுக்குள் சிக்கி சிறு வன உயிரினங்கள் இறந்து கிடந்தன. கண்ணாடி பாட்டில்கள் வீசப்பட்டு இருந்ததால், காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகளின் கால்களை அவை பதம் பார்க்கும் அபாயமும் இருந்தது. இந்த தூய்மை பணி குறித்து நீதிபதி தமிழ்செல்வன் கூறியதாவது:-

    நீலகிரியின் பசுமையை பாதுகாக்க நாம் அனைவரும் முன்வர வேண்டும். குறிப்பாக சமவெளியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இயற்கையின் முக்கியத்துவத்தை அறிந்து பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதிக்குள் வீசுவதை தவிர்க்க வேண்டும். நீலகிரியின் உயிர்சூழல் மண்டலத்தை பாதுகாத்தால் மட்டுமே மழை வளம், தூய்மையான காற்று நமக்கு கிடைக்கும். இதை அனைவரும் உணர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் செண்பகபிரியா, வனச்சரகர் சிவக்குமார், வக்கீல் கருணாநிதி, நீதிமன்ற தலைமை எழுத்தர் யோகராஜ், சட்டப்பணிகள் ஆணைக்குழு உதவியாளர்கள் மகேஷ்வரன், விக்னேஷ் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
    ×