search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coimbatore govt school"

    அரசு பள்ளியில் சேர்ந்தால் ஒரு கிராம் தங்க நாணயம், ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு கோவையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
    அன்னூர்:

    தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு அரசு தொடக்க, நடுநிலை, மேல்நிலைப்பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது.

    பெற்றோரின் ஆங்கில மோகத்தால் அரசு பள்ளிகள் மூடப்படும் நிலை உருவானதையடுத்து கடந்த 4 ஆண்டுகளாக அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வி செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் பெற்றோர் மத்தியில் அரசு பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்க ஆர்வம் குறைந்து வருகிறது.

    கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள முடீஸ் அரசு மேல்நிலைப்பள்ளியில் 17 மாணவர்கள் மட்டுமே படித்ததால் அந்த பள்ளி கடந்த வாரம் தற்காலிகமாக மூடப்பட்டது. அங்கு பணியாற்றிய 10 ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட்டனர்.

    இந்தநிலையில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு பள்ளியில் சேர்ந்தால் ஒரு கிராம் தங்க நாணயம், ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு கோவையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியம் கோனார்பாளையம் தொடக்க பள்ளியில் பல ஆண்டுகளாக 6 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். அதிலும் கடந்த கல்வி ஆண்டு முடிவில் 5-ம் வகுப்பு முடித்த 2 பேர் கானூர்புதூர் உயர்நிலைப்பள்ளிக்கு சென்று விட்டனர். இதனால் மாணவர்கள் எண்ணிக்கை 4 ஆக குறைந்தது. மாணவர்கள் எண்ணிக்கை 10-க்கு குறைவாக இருப்பதால் பள்ளி மூடப்படும் அபாயம் ஏற்பட்டது.


    இதையடுத்து பள்ளி வளர்ச்சிக்குழு சார்பில் மாணவர் சேர்க்கையை ஊக்கப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இப்பள்ளியில் முதலில் சேரும் 10 மாணவர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் பள்ளியில் சேரும் அனைவருக்கும் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை மற்றும் 2 செட் சீருடைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை நோட்டீசாக அச்சடித்து அல்லப்பாளையம், கோனார்பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் விநியோகித்தனர்.

    இதற்கு பலன் அளிக்கும் வகையில் நேற்று 2 மாணவிகள் உள்பட 3 பேர் பள்ளியில் சேர்ந்தனர். இதனால் மாணவர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்தது. இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேஷ் கூறும்போது, பள்ளியில் நாளை மேலும் 4 மாணவர்கள் சேர உள்ளனர். இதனால் மாணவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துவிடும். கல்வி அதிகாரிகள் முன்னிலையில் புதிய மாணவர்களுக்கு தங்க நாணயம் மற்றும் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றார். #Tamilnews
    ×