search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chettinad Rangoon Pudding"

    • புட்டு ஒரு ஆரோக்கியமான உணவு.
    • கோதுமை புட்டு, கேழ்வரகு புட்டு, சிவப்பரிசி புட்டு என பல வகைகள் உள்ளன.

    புட்டு ஒரு ஆரோக்கியமான உணவு. இதில் கோதுமை புட்டு, கேழ்வரகு புட்டு, சிவப்பரிசி புட்டு என பல வகைகள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான புட்டு பிடிக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு ஈவ்னிங் ஸ்நாக்ஸ் ஆக சிப்ஸ் உள்ளிட்டவற்றை கொடுப்பதற்கு பதிலாக ஆவில் வேகவைத்து செய்யும் பலகாரங்கள் போன்றவற்றை செய்து கொடுக்கலாம். செட்டிநாடு ஸ்பெஷல் ரங்கூன் புட்டு எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க...

    தேவையான பொருட்கள்

    ரவை -ஒரு டம்ளர்

    வெல்லம்-100 கிராம்

    ஏலக்காய் -3

    நெய்- தேவையான அளவு

    தேங்காய்- அரை மூடி

    திராட்சை-6

    முந்திரி பருப்பு -15

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் 100 கிராம் வெல்லத்தை போட்டு அது மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும். வெல்லம் முழுமையாக உருகியது அதை அடுப்பில் இருந்து இறக்கி ஆறியதும், அதை வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியில் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து அதில் முந்திரியை சேர்த்து வறுக்க வேண்டும். முந்திரி நிறம் மாற ஆரம்பிக்கும் போது அதில் திராட்சையை சேர்த்து வறுக்க வேண்டும். இவை இரண்டையும் வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    இப்போது அதே வாணலியில் அரை மூடி தேங்காயை எடுத்து நன்றாக வறுக்க வேண்டும். தேங்காய் நெய்யில் பொன்னிறமாக மாறியதும், அதையும் வேறு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.

    மீண்டும் அதே வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து அதில் ரவையை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து, ரவையை நன்றாக, அதே நேரத்தில் கருகிவிடாமல் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ரவை சிவக்க ஆரம்பிக்கும் போது அதில் ஏற்கனவே வடிகட்டி எடுத்து வைத்த வெல்லப்பாகை சேர்க்க வேண்டும். இப்போது அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விட வேண்டும். வெல்லம் முழுமையாக ரவையில் மிக்ஸ் ஆனதும், அதில் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு நன்றாக கிளறி விட வேண்டும். அதில் அரைஸ்பூன் ஏலக்காய் பவுடர் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

    பின்னர் ஏற்கனவே வறுத்து வைத்த முந்திரி திராட்சை, தேங்காய் ஆகியவற்றை இதில் சேர்க்க வேண்டும். இப்போது அடுப்பை மிதமான தீயில் வைத்து, மூடி போட்டு 5 நிமிடம் வரை வேக விட வேண்டும். பின்னர் இதில் தேவையான அளவு நெய் சேர்த்து நன்றாக கிளறி விட்டால், சுவையாக ரங்கூன் புட்டு தயார்.

    ×