என் மலர்

  நீங்கள் தேடியது "chennaihighcourt"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பயிலும் 1,2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்க கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #cbse #chennaihighcourt
  சென்னை:

  மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. பள்ளிகள் நாடு முழுவதும் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் மாணவர்களுக்கு அதிக அளவில் வீட்டுப்பாடங்கள் கொடுக்கப்படுகின்றன. இதனால் மாணவர்கள் வீட்டிற்கு வந்த பின்னரும் வெகுநேரம் படிக்க வேண்டியதாக உள்ளது.  இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில் எம்.புருஷோத்தமன் என்ற வக்கீல் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

  ‘தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.,) பாடத்திட்ட விதிகளை மீறி சி.பி.எஸ்.இ. பள்ளிகள் 1 முதல் 3-ம் வகுப்பு வரை 8 பாடங்களைப் போதிக்கின்றன. சின்ன குழந்தைகளுக்கும் வீட்டுப்பாடம், ‘அசைன்மெண்ட்’ போன்றவையும் கட்டாயமாக்கப்பட்டுள்ள.

  தனியார் நிறுவனங்களிடம் இருந்து புத்தகங்களை வாங்க வேண்டும் என்பதற்காக இந்தப் பாடங்களை தனியார் பள்ளிகள் குழந்தைகளிடம் திணிக்கின்றன. இதனால் குழந்தைகள் தங்களது எடையைக் காட்டிலும் கூடுதல் சுமையாக புத்த கங்களை சுமந்து செல்கின்றனர். அவர்கள் மனதளவிலும் பாதிக்கப்படுகின்றனர். எனவே என்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்டத் தின்படி சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் குறிப்பிட்ட பாடங்களை மட்டுமே நடத்த வேண்டுமென உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

  இந்த வழக்கை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்தார். மத்திய அரசு, என்.சி.இ.ஆர்.டி., சி.பி.எஸ்,இ., ஆகியவை பதில் மனுக்களை தாக்கல் செய்தன. என்.சி.இ.ஆர்.டி. சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘குழந்தைகள் மத்தியில் எவ்வித கல்வி பாகுபாடும் பார்க்கக்கூடாது. ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி எந்தவொரு மன அழுத்தத்தையும் தரக்கூடாது என பள்ளிகளை அறிவுறுத்தியுள்ளோம்.

  கல்வி தரத்தை மேம்படுத்த தலைசிறந்த ஆசிரியர்களைக் கொண்டு நாங்களே பாடப்புத்ததங்களையும் வடிவமைத்து வழங்கி வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் குறைந்த கட்டணத்தில் 364 தலைப்புகளில் தரமான புத்தகங்களை வெளியிடுகிறோம். ஒரு குழந்தைக்கு எவ்வளவு நேரம் போதிக்கவேண்டும்?. எவ்வளவு நேரம் அதுவாக படிக்க வேண்டும்? என்பதை வரையறுத்துதான் பாடத்திட்டமே உருவாக்கப்படுகிறது.

  அதன்படி ஆரம்பக்கல்வியில் இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் கண்டிப்பாக கொடுக்கக் கூடாது. மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை வாரத்தில் 2 மணிநேரம் மட்டுமே வீட்டுப் பாடம் கொடுக்க வேண்டும். 8-ம் வகுப்பு வரை உள்ள நடுநிலைப்பள்ளிகளில் தினமும் ஒரு மணி நேரம் வீதம் வாரத்தில் 5 முதல் 6 மணி நேரமும், 9ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தினமும் 2 மணி நேரம் வீதம் வாரத்தில் 10 முதல் 12 மணி நேரம் மட்டுமே வீட்டுப்பாடம் அளிக்கப்படவேண்டும் என ஏற்கெனவே பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  புத்தகச் சுமையைக் குறைக்க முதல் மற்றும் இரண்டாம் வகுப்புக்கு மொழி, கணிதம் என 2 பாடங்களையும், மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மொழி, சூழ்நிலையியல், கணிதம் என 3 பாடங்களை மட்டுமே போதிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

  பள்ளிகளில் விநியோகம் செய்யப்படும் புத்தகங்களைத்தான் வாங்க வேண்டுமென மாணவர்  களை ஒருபோதும் நிர்பந்திக்கக் கூடாது.

  இது தொடர்பாக பெற்றோரும் பள்ளிநிர்வாகத்துடன் பேசவேண்டும். அதே போல எல்லா பாடத்தையும் ஒரேநாளில் போதிக்க வேண்டும் என்ற கட்டாயமும் கிடையாது. வாழ்க்கைக்கு தேவையான அறிவை போதிக்கும் இடமாகவே பள்ளிகள் திகழ வேண்டும்.

  தரமான கல்வியை மட்டுமே போதிக்க வேண்டும். கல்வி ஒருபோதும் சுமையாக இருக்கக் கூடாது என்பதை மட்டுமே தாரகமந்திரமாக வைத்து என்.சி.இ.ஆர்.டி. செயல்பட்டு வருகிறது. அதேபோல இபாத்சாலா என்ற மின்னணு வடிவிலான புத்தக திட்டத்தையும் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறோம். இது கைபேசி செயலி வாயிலாகவும் பெற முடியும் என்று கூறிருந்தார்.

  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்,கிருபாகரன், கோடை விடுமுறையான இன்று தீர்ப்பு அளித்தார். அதில், அவர் கூறியிருப்பதாவது-

  சி.பி.எஸ்.இ. பள்ளிகள் அனைத்தும் நடப்பு கல்வி ஆண்டு முதல், என்.சி. இ.ஆர்.டி. பரிந்துரைத்துள்ள புத்தகங்களை மட்டும் வாங்க வேண்டும். தனியார் நிறுவனங்கள் வெளியிடும் புத்தகங்களை வாங்கக் கூடாது. அந்த புத்தகங்களை பயன்படுத்தவும் கூடாது.

  இதுமட்டுமல்ல 1 மற்றும் 2-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு வீட்டு பாடம் கொடுக்கக்கூடாது. இந்த மாணவர்களுக்கு மொழி மற்றும் கணித பாடங்களை மட்டுமே நடத்த வேண்டும். தனியார் நிறுவன புத்தகங்களை வாங்கி வேறு எந்த பாடங்களையும் நடத்தக்கூடாது. 3 முதல் 5 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கூடுதலாக சுற்றுச்சூழல் படிப்புகளை நடத்தலாம்.

  இதை மீறி தனியார் பள்ளிகள் செயல்பட்டால், அந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை உடனே ரத்து செய்து, அந்த பள்ளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த பள்ளிகளை அடையாளம் காண தனியாக பறக்கும்படை ஒன்று மத்திய அரசு அமைக்க வேண்டும்.

  தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் புத்தகங்களை வாங்கி, அதை தினமும் சுமக்க முடியாமல் மாணவர்கள் திணறுகின்றனர். அந்த குழந்தைகள் ஒன்றும் பளு தூக்கும் வீரர்கள் இல்லை என்பதை தனியார் பள்ளி நிர்வாகம் புரிந்து கொள்ள வேண்டும்.

  இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். #cbse #chennaihighcourt

  ×