search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai Governor House"

    சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையை பொதுமக்கள் தினமும் சுற்றி பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் உள்ள கவர்னர் மாளிகையும் தற்போது முக்கிய சுற்றுலா தலமாக மாறியுள்ளது.

    சென்னை கிண்டியில் பல ஏக்கர் பரப்பளவில் உள்ள சோலையின் நடுவே கவர்னர் மாளிகை அமைந்துள்ளது. இதில் பாரம்பரிய கட்டிடங்கள், பூங்கா, புல்வெளி, சுற்றித்திரியும் மான்கள் என பார்த்து மகிழ பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.

    முன்பு கவர்னர் மாளிகையை பொதுமக்கள், உரிய அனுமதி பெற்று வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பார்க்கலாம். தற்போது இந்த விதிமுறை தளர்த்தப்பட்டுள்ளது.

    தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்ட பிறகு கவர்னர் மாளிகையை தினமும் பொதுமக்கள் சுற்றிப்பார்க்க அனுமதி அளித்துள்ளார். முன்பு மாலையில் ஒரு முறை தான் கவர்னர் மாளிகையை பொதுமக்கள் பார்க்க அனுமதி வழங்கப்பட்டது.

    இப்போது மாலை 4.30 மணிமுதல் 5.30 மணி வரை ஒரு முறையும் தொடர்ந்து 5.30 முதல் 6.30 மணி வரை மற்றொரு முறையும் பொது மக்கள் கவர்னர் மாளிகையை சுற்றிப்பார்க்கலாம்.

    கவர்னர் மாளிகையை சுற்றிப்பார்க்க வருபவர்கள் முன்னதாகவே, ஆன்லைன் மூலம் தாங்கள் வரும் தேதி, நேரம் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். கவர்னர் மாளிகையை சுற்றிப்பார்க்க 2 பேட்டரி கார்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரே நேரத்தில் 20 பேர் கவர்னர் மாளிகையை சுற்றிப்பார்க்கலாம். 2 ஷிப்ட் பார்க்க ஏற்பாடு செய்திருப்பதால் தினமும் 40 பேர் கவர்னர் மாளிகையை பார்த்துவரலாம்.

    பேட்டரி காரில் செல்பவர்கள் ஒரு மணிநேரம் கவர்னர் மாளிகையை பார்க்கலாம். அவர்கள் அமைச்சர்கள் பதவி ஏற்கும் தர்பார்ஹால், பரந்த புல்வெளி, பிரதமர், ஜனாதிபதி தங்கும் பாரம்பரிய மாளிகை, ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய ‘போலோ’ விளையாட்டு மைதானம், பூங்கா, இங்குள்ள புல்வெளி, மரங்கள் நிறைந்த சோலையில் ஓடித்திரியும் மான்கள் ஆகியவற்றை பார்த்து மகிழலாம்.

    கவர்னர் மாளிகையை காணவரும் பொதுமக்களை தினமும் கவர்னர் சந்தித்து தேனீர் விருந்து கொடுத்து வாழ்த்து சான்றிதழ்களையும் வழங்கி வருகிறார்.

    கவர்னர் மாளிகையை சுற்றிப்பார்க்க முன்பதிவு செய்பவர்கள் தலா ரூ.25 கட்டணம் செலுத்த வேண்டும். இது பேட்டரிகார் பராமரிப்புக்காக பயன்படுத்தப்படுகிறது. கவர்னர் உத்தரவுப்படி பொதுமக்கள் தினமும் 2 மணிநேரம் கவர்னர் மாளிகையின் அனைத்து பகுதிகளையும் சுற்றிப்பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை கூடுதல் தலைமை செயலாளர் ராஜகோபால் செய்துள்ளார். கவர்னர் மாளிகையை சுற்றிப் பார்க்கும் பொதுமக்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

    சுற்றுலா பயணிகளும் பெருமளவில் வருகின்றனர். எனவே முன்பதிவு செய்யாமல் நேரில் வருபவர்களையும் கவர்னர் மாளிகையை சுற்றிப்பார்க்க அனுமதிப்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. #Tamilnews

    ×