search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chandrayaan-3 mission"

    • நிலவின் புகைப்படங்களையும் அவ்வப்போது இஸ்ரோ வெளியிட்டு வருகிறது
    • இந்த நடவடிக்கை நிலவின் மேற்பரப்பில் இருந்து மாதிரிகள் எடுக்க பயன்படும்

    இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ கடந்த ஜூலை 14-ம் தேதி நிலவின் தென் துருவத்தை அடைய சந்திரயான்-3 எனும் விண்கலனை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

    கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி, சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தை அடைந்தது.

    சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து விக்ரம் எனும் லேண்டர் சாதனமும், பிரக்யான் எனும் ரோவர் சாதனமும் பிரிந்து, நிலவை அடைந்து, தங்கள் பணிகளை சிறப்பாக செய்து வருவதாக இஸ்ரோ தெரிவித்தது.

    அவை பூமிக்கு அனுப்பும் நிலவின் புகைப்படங்களையும் அவ்வப்போது இஸ்ரோ வெளியிட்டு வருகிறது.

    அந்த வகையில், நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டர் சாதனம் குறித்து தற்போது இஸ்ரோ அறிவித்திருப்பதாவது:

    விக்ரம் லேண்டர், திட்டமிட்ட குறிக்கோளை தாண்டி சிறப்பாக செயல்படுகிறது. அது வெற்றிகரமாக ஒரு "ஹாப்" பரிசோதனையையும் நிறைவு செய்தது. கட்டளையிட்டதும், அதன் இஞ்சின்கள் செயலாக்கப்பட்டு, நிலவின் தரைப்பரப்பிலிருந்து 40 சென்டி மீட்டர் உயரத்திற்கு வெற்றிகரமாக உயரே கிளம்பி, சுமார் 30-40 சென்டிமீட்டருக்கு அப்பால் பத்திரமாக தரையிறங்கியது. எதிர்காலத்தில், நிலவின் மேற்பரப்பில் இருந்து 'மாதிரிகள்' எடுப்பதற்கும், மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டங்கள் குறித்து முடிவெடுக்கவும், வெற்றிகரமாக லேண்டர் உயரே எழும்பிய இந்த நிகழ்வு அறிவியல் ரீதியாக பயன்படும். அனைத்து சாதனங்களின் இயக்கங்களும் அதனதன் கட்டுப்பாடுகளுக்குள் ஆரோக்கியமான நிலையில் செயல்படுகின்றன. ரேம்ப், (Ramp) சேஸ்ட் (ChaSTE) மற்றும் இல்ஸா (ILSA) ஆகியவை முதலில் செயலாக்கப்பட்டு, அதில் வெற்றி கண்ட பின்னர், மீண்டும் மடக்கப்பட்டு, பிறகு மீண்டும் மறுசெயலாக்கத்திற்கு வெற்றிகரமாக உட்படுத்தப்பட்டது.

    இவ்வாறு இஸ்ரோ தனது தற்போதைய அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

    ஒரு விண்கலன் நிலவின் தென் துருவத்தை வெற்றிகரமாக அடைவது, இதுவரையில் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள வல்லரசுகள் உட்பட எந்த நாடும் செய்யாததால், உலகிலேயே பெரும் சாதனையாக இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலன் முயற்சி கருதப்படுகிறது.

    ×