search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Car Bomb Blast Case"

    • மயிலாடுதுறையில் முகம்மது பைசல் என்பவர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
    • நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 4 இடங்களில் சோதனை நடந்தது.

    கோவை:

    கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந்தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

    இதில் காரில் இருந்த உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவன் உயிரிழந்தான். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் முபின் ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததும், கோவையில் நாசவேலையை அரங்கேற்றும் நோக்கத்தில் இந்த செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இதற்கிடையே இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவையிலேயே முகாமிட்டு, கார் குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.

    மேலும் இந்த வழக்கில் தொடர்புடையதாக முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், முகமது தவுபிக், உமர் பாரூக், பெரோஸ்கான், சேக் இதயத்துல்லா, சனோபர் அலி ஆகிய 11 பேரை கைது செய்தனர்.

    அவர்கள் அனைவரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் ஐ.எஸ். தொடர்புடையவர்கள் மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தவர்களின் வீடுகளிலும் சோதனை நடந்தது.

    கோவை குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த சில வாரங்களில், கர்நாடக மாநிலம் மங்களூருவிலும் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இது தொடர்பாகவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று கோவை குண்டு வெடிப்பு தொடர்பாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா என மொத்தம் 60 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    தமிழகத்தில் சென்னை, நெல்லை, கோவை, மயிலாடுதுறை என 40 இடங்களில் சோதனை நடக்கிறது.

    இதில் கோவையில் மட்டும் கோவை கோட்டைமேடு, புல்லுக்காடு, உக்கடம், பிருந்தாவன் நகர், பாரத் நகர், குனியமுத்தூர், டி.கே.செட்டி வீதி, வசந்தா நகர் என 15 இடங்களில் சோதனை நடந்தது.

    இந்த வழக்கில் கைதானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளவர்களின் வீடுகளில் 16 பேர் கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர்.

    காலை 6 மணி முதல் இந்த சோதனையானது நடந்து வருகிறது.

    சோதனையின் போது வீட்டிற்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. வீட்டின் கதவுகளை பூட்டி கொண்டு வீடு முழுவதும் அங்குலம், அங்குலமாக சோதனை செய்தனர்.

    இதபோல் பொள்ளாச்சியில் தடைசெய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த சையது ரகுமான் என்பவரது வீட்டிலும் சோதனை நடக்கிறது.

    சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் சிக்கியுள்ளன. இருப்பினும் சோதனை முடிவிலேயே கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் விவரங்கள் தெரியவரும்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த வழக்கில் தொடர்புடைய முகமது அசாருதீன் உள்பட 7 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீண்டும் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது அவர்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் பல தகவல்களையும் கூறியுள்ளனர்.

    அவர்களிடம் பெற்ற ஆதாரங்கள், வீடியோக்களின் அடிப்படையிலேயே இன்று இந்த சோதனையானது நடந்தது.

    சென்னையில் இன்று 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். கொடுங்கையூர், மண்ணடி உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடந்தது. சோதனையின் போது சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

    மயிலாடுதுறையில் முகம்மது பைசல் என்பவர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 4 இடங்களில் சோதனை நடந்தது. டவுன் கரிக்காத்தோப்பைச் சேர்ந்த அன்வர்தீன், ஏர்வாடி கட்டளைத் தெருவைச் சேர்ந்த கமாலுதீன், தென்காசி மாவட்டம் அச்சன்புதூரில் ஒருவர் வீடு, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் ஆரீஸ் என்பவர் வீட்டில் இந்த சோதனை நடந்தது.

    ஒரே நேரத்தில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் 60 இடத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×