search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bus employees"

    போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் குறித்த முடிவை நாளை பல்லவன் இல்லம் முன்பு நடைபெறும் வாயிற் கூட்டத்தில் அறிவிக்கப்போவதாக தெரிவித்துள்ளனர். #TNBusStrike #TNBus
    சென்னை:

    போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய ரூ.6,800 கோடி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், தீபாவளி முன்பணம் கொடுக்க வேண்டும், ஒழுங்கு நடவடிக்கையை கைவிட வேண்டும், பழிவாங்கும் நோக்கில் போடப்பட்ட வழக்குகளை காரணம் காட்டி, தற்காலிக பணி நீக்கம், இடமாற்றம் செய்யப்பட்ட 86 தொழிலாளர்களின் இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

    போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை தீர்ப்பது தொடர்பாக தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தலைவர்கள், போக்குவரத்து கழக அதிகாரிகள், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை கடந்த மாதம் 22, 29 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடந்தது.

    இதில் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 3-வது கட்ட பேச்சுவார்த்தை நேற்று தேனாம்பேட்டையில் நடந்தது. இதில் சுமூக தீர்வு எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.


    இதைத் தொடர்ந்து போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் குறித்த முடிவை நாளை பல்லவன் இல்லம் முன்பு நடைபெறும் வாயிற் கூட்டத்தில் அறிவிக்கப் போவதாக தொ.மு.ச. பேரவை பொதுச் செயலாளர் மு.சண்முகம், சி.ஐ.டி.யு. சவுந்தரராஜன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

    இதுபற்றி சவுந்தரராஜனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    இந்த அரசு போக்குவரத்து தொழிலாளர்களை வஞ்சிக்கும் நோக்குடன் நடந்து கொள்கிறது. ரூ.7 ஆயிரம் கோடி நிலுவை தொகையில் ரூ. 1000 கோடி தருவதாக கூறுகிறது. அப்படியானால் ரூ. 6 ஆயிரம் கோடி பணம் எங்களுக்கு எப்போது தருவார்கள்?

    தீபாவளி முன்பணம் கூட தர மறுக்கிறார்கள். அரசு ஊழியர்களுக்கு கேட்டதை கொடுக்கின்றனர். மின் வாரிய தொழிலாளர் உள்பட பல்வேறு ஊழியர்களுக்கு பிரச்சனை இல்லாமல் வழங்குகிறார்கள்.

    போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மட்டும் பணத்தை வழங்காமல் பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். இதனால்தான் நாங்கள் வேலை நிறுத்தம் செய்வது தொடர்பாக நாளை அறிவிக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNBusStrike #TNBus
    ×