search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "blackouts"

    • மாண்டஸ் புயலின் மையப்பகுதியான கண் பகுதி மாமல்லபுரத்தின் அருகே கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
    • காற்றின் வேகம் அதிகரிக்கும் பட்சத்தில் மின்தடை ஏற்படும்

    விழுப்புரம்:

    வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் தீவிரம் அடைந்து தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இப்புயல் புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு இடையே இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. மாண்டஸ் புயலின் மையப் பகுதியான கண் பகுதி மாமல்லபுரத்தின் அருகே கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இப்புயல் கரையைக் கடக்கும் பொழுது மணிக்கு 65 முதல் 75 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என்றும், சில இடங்களில் 85 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    இதனால் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதையொட்டி விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. உள்ளாட்சி, பொதுப்பணி, மின்சாரம், வருவாய்த் துறை உள்ளிட்ட அனைத்து துறை ஊழியர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

    விழுப்புரம் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கிழக்கு கடற்கரை சாலையில் சின்னமுதலியார்சாவடி, பெரியமுதலியார்சாவடி, பிள்ளைச்சாவடி, அனுமந்தை, கூனிமேடு, நடுக்குப்பம், கீழ்புத்துப்பட்டு, தந்திராயன்குப்பம், அழகன்குப்பம், வசங்குப்பம், கைப்பாணிக்குப்பம் ஆகிய 19 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் கடல் சீற்றத்தின் காரணமாக கடந்த 3 நாட்களாக மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இந்நிலையில் நேற்று மாலை முதலே இப்பகுதிகளில் மிதமான வேகத்தில் காற்று வீசத் துவங்கியது. இது படிப்படியாக அதி கரித்து இன்று காலை முதல் 30 கி.மீ., வேகத்தில் வீசி வருகிறது. இது படிப்படியாக உயரும் எனத் தெரிகிறது. வழக்கத்திற்கு மாறாக கடல் அதிக சீற்றத்துடன் காணப்படுகிறது. மீனவர்கள் தங்களது படகுகளை மேடான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். இருப்பினும் பலத்த காற்றினால் கடல் சீற்றம் அதிகரித்து மேடான பகுதி வரை கடல் நீர் வருகிறது. இதனால் மீனவர்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

    மேலும், விழுப்புரம் மாவட்ட கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் மின்தடை உள்ளது. இன்று காலை 8 மணிக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. காற்றின் வேகம் அதிகரிக்கும் பட்சத்தில் மின்தடை ஏற்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் ஒரு சில கிராமங்களில் குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் கிழக்கு கடற்கரை சாலை வெறிச்சோடி காணப்படுகிறது.

    ×