search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP Plan"

    சோபியாவை தாக்க மர்ம மனிதர்கள் திட்டமிட்டுள்ள‌தாக தெரிய வந்துள்ளது. எனவே அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வக்கீல் ராமச்சந்திரன் கூறினார். #Sophia
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியை சேர்ந்த ஆராய்ச்சி மாணவி லூயிஸ் சோபியா. இவர் கனடாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் தனது பெற்றோருடன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்தார். அப்போது அதே விமானத்தில் பா.ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் வந்தார்.

    அப்போது மாணவி சோபியா பா.ஜனதாவுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினார். இதனால் அவருக்கும், தமிழிசை சவுந்தரராஜனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.



    இதுபற்றி தமிழிசை சவுந்தரராஜன் புதுக்கோட்டை போலீசில் அளித்த புகாரின் பேரில் மாணவி சோபியா கைது செய்யப்பட்டார். கைதான சோபியாவுக்கு நேற்று தூத்துக்குடி நடுவர் நீதிமன்றம் நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கியது. இதனிடையே சோபியாவின் தந்தை சாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடி விமான நிலையத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மீது புதுக்கோட்டை போலீசில் புகார் கொடுத்து உள்ளேன். இதுவரை அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க‌வில்லை. சிவில் ஏவியேசன் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுத்தாலும், அதனை சட்டப்பூர்வமாக சந்திப்போம்.

    எனது மகளின் பாஸ்போர்ட்டை முடக்கவும், அவருடைய எதிர்காலத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தவும் முயற்சி செய்கிறார்கள். விமானத்தில் கோ‌ஷம் எழுப்ப வேண்டும் என்று எங்களுக்கு முன்கூட்டியே எதுவும் திட்டம் இல்லை. எங்களுக்கு எந்த அரசியல் கட்சி ஆதரவும் கிடையாது. நாங்கள் எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் இல்லை. எங்களை பா.ஜனதா தொண்டர்களும், தமிழிசை சவுந்தரராஜனும் மிரட்டியதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விமானத்தில் எதற்காக கோ‌ஷம் போட்டார் என்பதை மகளைத்தான் கேட்க வேண்டும். டுவிட்டரில் முன்கூட்டியே பதிவு செய்து இருப்பதாக கூறுகிறார்கள். தூத்துக்குடியில் உள்ள எல்லோரும் ஸ்டெர்லைட்டால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதே போன்று மீத்தேன் வாயு, 8 வழிச்சாலையால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சரக்கு மற்றும் சேவை வரியால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதனை பதிவு செய்து உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாணவியின் வக்கீல் ராமச்சந்திரன் கூறுகையில், “சோபியாவை சில மர்ம மனிதர்கள் கண்காணிப்பது தெரிய வந்துள்ளது. அந்த மர்ம மனிதர்கள் சோபியாவை தாக்க திட்டமிட்டுள்ள‌தாக தெரிய வந்துள்ளது. எனவே அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    அவருடைய உயிருக்கு எந்த தீங்கும் வராமல் பாதுகாக்க வேண்டிய கடமை போலீசுக்கு உள்ளது. அவருடைய பாஸ்போர்ட்டை ஒப்படையுங்கள் என்று புதுக்கோட்டை போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். ஆளும் பா.ஜனதா கட்சியினரை சந்தோசப்படுத்துவதற்காக போலீசார் வேலை பார்த்து வருகின்றனர். அதனை விடுத்து அவருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்றார்.

    இதனிடையே சோபியாவுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சில அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்தன. இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா கூறியதாவது:-

    தூத்துக்குடி விமான நிலையத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சோபியாவின் தந்தை அளித்த புகார் குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது. தேவைப்பட்டால் வழக்குப் பதிவு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். வழக்கின் விசாரணை நடந்துவரும் நிலையில் அவசியம் ஏற்பட்டாலோ அல்லது அவர்கள் பாதுகாப்பு கேட்டாலோ சோபியா மற்றும் அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Sophia

    ×