search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bio Diesel"

    சுற்றுச்சூழலை பாதிக்காத பயோ டீசல் மும்பையில் விற்பனை செய்யப்படுகிறது. இது தற்சமயம் பயன்படுத்தப்படும் டீசலுக்கு மாற்றாக அமைந்துள்ளது. #biotech #diesel



    சுற்றுச்சூழலை பாதிக்காத பயோ டீசலை மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த மை எகோ எனர்ஜி (எம்.இ.இ.) எனும் நிறுவனம் உருவாக்கியுள்ளது. புனே-மும்பை நெடுஞ்சாலையில் இதற்கான விற்பனையகத்தையும் அமைத்துள்ளது. இந்நிறுவனம் பயோ டீசல் விற்பனைக்காக அமைக்கும் இரண்டாவது விற்பனையகம் இதுவாகும்.

    தாவர எண்ணெய், வேளாண் கழிவுகள், உணவில் பயன்படுத்த முடியாத எண்ணெய் வித்துகள் உள்ளிட்டவை மூலம் இந்த பயோ டீசல் தயாரிக்கப்படுகிறது. இது அனைத்து டீசல் என்ஜின் வாகனங்களுக்கும் ஏற்றது.

    வழக்கமாக வாகனங்களில் பயன்படுத்தப்படும் டீசலுக்கான தர அளவீட்டின்படி இ.என். 590 தரத்தைக் கொண்டதாக இந்த பயோ டீசல் உள்ளது. இதனால் டீசல் என்ஜினில் எவ்வித மாறுதலும் செய்யத் தேவையில்லை என்று எம்.இ.இ. நிறுவனத்தின் இணை நிறுவனர் சந்தோஷ் வர்மா தெரிவித்துள்ளார்.

    ‘இண்ட்-டீசல்’ என்ற பெயரில் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த பயோ டீசல் ஒரு லிட்டர் 64 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும் இந்த டீசல் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் வருவதால் ஜி.எஸ்.டி.யில் பதிவுபெற்ற சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் இண்ட்-டீசலை பயன்படுத்தினால் லிட்டருக்கு ரூ.8 வரை சலுகை பெறலாம்.

    இண்ட்-டீசலை பயன்படுத்துவதால் சுற்றுச் சூழல் மாசுபடுவதும் குறையும். ஏனெனில் இதில் வழக்கமான டீசலில் உள்ளதைப் போன்ற கந்தக அளவு கிடையாது. இது அதிக அளவில் புழக்கத்திற்கு வரும்போது நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவும் கணிசமாகக் குறையும்.
    ×