search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bike van crash"

    பைக் மீது வேன் மோதிய விபத்தில் குழந்தை உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள திரும்பட்டை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 29). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சத்யா (28). இவர்களது பெண் குழந்தை துர்கா (4).

    போளூர் காங்கேயனூரில் சத்யாவின் தாய் வீடு உள்ளது. தாய் வீட்டில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. இதில் சத்யா தனது கணவர் மற்றும் குழந்தையுடன் சென்று கலந்து கொண்டார்.

    இன்று காலை சத்யா தனது கணவர், குழந்தையுடன் செங்கம் திரும்பினார். 3 பேரையும் போளூர் பஸ் நிலையத்தில் விடுவதற்காக ஒரே பைக்கில் ஏற்றிக் கொண்டு சத்யாவின் தம்பி பார்த்திபன் (25) அழைத்துச் சென்றார்.

    காங்கேயனூர் கிராமப் பகுதியில் இருந்து மெயின் ரோட்டிற்கு வந்த போது போளூரில் இருந்து செங்கம் நோக்கி அதிவேகத்தில் வந்த டெம்போ வேன் பைக் மீது மோதியது.

    இதில் பைக்கில் சென்ற குழந்தை உள்பட 4 பேரும் தூக்கி வீசப்பட்டு நடுரோட்டில் விழுந்து பலத்த காயமடைந்தனர். பார்த்திபனும், சத்யாவும் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

    குழந்தை துர்காவும், சக்திவேலும் ரத்த வெள்ளத்தில் துடி துடித்தபடி உயிருக்கு போராடினர். அவர்களை பொதுமக்கள் மீட்டு போளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை துர்கா பரிதாப மாக உயிரிழந்தது. சக்திவேல் நிலைமை கவலைக் கிடமாக இருப்பதால் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சாலை விபத்தில் ஒரே குடும்பத்தில் குழந்தை உள்பட 3 பேர் பலியானதால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு மறியல் போராட்டம் செய்தனர்.


    போளூர் டி.எஸ்.பி. சின்ராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, போலீசார் விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தற்போது விபத்து நடந்த இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், நெடுஞ்சாலைத்துறையினர் வேகத்தடை அமைக்க வில்லை.

    இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. உயிரிழப்புகளும் தொடர்கிறது. தற்போது 3 உயிர்கள் பலியாகியுள்ளது. இதற்கு நெடுஞ்சாலைத்துறையினர் தான் காரணம் என்றுக்கூறி போலீசாருடன் பொது வாக்குவாதம் செய்தனர்.

    இதையடுத்து, இன்று மாலைக்குள் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.எஸ்.பி. உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×