search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhopal Teacher"

    • வரதட்சணை என்ற சமூக தீமையை முடிவுக்குக் கொண்டுவர உறுதி பூண்டுள்ளதாக காவல்துறை அதிகாரி கூறி உள்ளார்.
    • தண்டனை கிடைக்கும் என்ற பயம் மட்டுமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும் என்று ஆசிரியை கூறுகிறார்.

    திருமணத்தின்போது வரதட்சணை வாங்குவது இந்தியாவில் சட்டவிரோதம். ஆனால் பெரும்பாலான திருமணங்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வரதட்சணை என்பது நடைமுறையில் உள்ளது. வரதட்சணையால் பெண்கள் சந்தித்து வரும் துயரங்கள் குறித்த செய்திகள் புதிதல்ல. ஆனால், அதை எதிர்த்து ஒரு சிலரே தைரியமாக பொதுவெளியில் வந்து போராடுகின்றனர்.

    அந்த வகையில், மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகரமான போபாலில் உள்ள 27 வயதான ஆசிரியை ஒருவர், இந்த "சமூக தீமைக்கு" முற்றுப்புள்ளி வைக்க, போபால் காவல்துறை தலைமை அதிகாரி, ஹரிநாராயணன் சாரி மிஷ்ராவிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.

    10க்கும் மேற்பட்ட ஆண்களால் வரதட்சணை காரணமாக தாம் நிராகரிக்கப்பட்டு தனக்கு திருமணம் நின்று போனதாக தெரிவிக்கும் அவர், தனது சொந்த அனுபவத்தை வைத்து இந்த மனுவை கொடுத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

    அவரின் தந்தை, கடந்த பிப்ரவரியில் பெண் பார்ப்பதற்காக ஒரு இளைஞனையும் அவனது குடும்பத்தையும் வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார். பின்னர் அந்த இளைஞனின் தந்தையிடம் வரதட்சணை குறித்து கேட்டிருக்கிறார். அவர்கள் ரூ.50 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை எதிர்பார்ப்பதாக கூறியிருக்கின்றனர். மேலும், உங்கள் மகள் அழகாக இருந்திருந்தால், நாங்கள் உங்களுக்கு தள்ளுபடி தருவோம் என்று அந்த இளைஞனின் தந்தை கேலியாக பேசியுள்ளார்.

    கடந்த வாரம், அவர் தனது போராட்டத்தின் ஒரு பகுதியாக மிஷ்ராவை சந்தித்தார். அவரிடம் அவர் அளித்த தனது மனுவில், திருமண இடங்களில் சோதனை நடத்துவதும், வரதட்சணை கொடுப்பவர்கள் அல்லது பெறுபவர்களைக் கைது செய்வதும்தான் இந்த கொடுமையை தடுக்க ஒரே தீர்வு என்றும், தண்டனை கிடைக்கும் என்ற பயம் மட்டுமே இந்த கொடூரமான நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும் என்றும் கூறுகிறார்.

    "வரதட்சணை ஒரு சமூகத் தீமை, அதை முடிவுக்குக் கொண்டுவர நாங்கள் (காவல்துறை) உறுதி பூண்டுள்ளோம். எந்தப் பெண் இது குறித்து உதவி கேட்டு காவல்துறையை அணுகினாலும் அவர்களுக்கு உரிய உதவியை வழங்குமாறு அனைத்து காவல் நிலையங்களுக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன்" என மிஷ்ரா கூறியிருக்கிறார்.

    இது குறித்து கருத்து தெரிவித்த மிஷ்ரா, "காவல்துறைக்கு வரம்புகள் உள்ளன. அவர்கள் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது. மேலும், இந்த விஷயத்தில் நாம் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மக்களின் மனநிலையையும் மாற்ற வேண்டும்" என கூறினார்.

    பெண்கள் உரிமை ஆர்வலர் கவிதா ஸ்ரீவஸ்தவா இது குறித்து கூறுகையில், "காவல்துறையினால் கண்டிப்பாக உதவ முடியும். ஆனால் வரதட்சணையை சமாளிப்பது ஒரு சிக்கலான பிரச்சனை. இந்தியாவில் வரதட்சணை தடைச்சட்டம் உள்ளது. அந்த சட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்" என கூறினார்.

    இந்த ஆசிரியையை போன்று மேலும் பலர் துணிச்சலாக போராட துவங்கினால், இந்த சமூக அவலம் கட்டுக்குள் வரலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

    ×