search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bhahubali elephant"

    யானை பயிரை சேதப்படுத்துவதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம். மேலும் எங்களது வாழ்வாதாரம் முற்றிலும் அழிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் தொடர்ந்து வாழ வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

    சிறுமுகை:

    மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளான தேக்கம்பட்டி, ஓடந்துறை, ஊமப்பாளையம், பாலப்பட்டி, லிங்காபுரம், ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் பாகுபலி யானை சுற்றிதிரிகிறு.

    இந்த யானை அங்குள்ள விவசாய நிலங்களில் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். மேலும் இரவு நேரங்களில் வெளியில் வரவும் அச்சப்படுகிறார்கள்.

    இதுகுறித்து விவசாயிகள் வனத்துறையிடம் பலமுறை புகார் தெரிவித்தனர். அவர்களும், அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஆனாலும் யானையின் நடமாட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

    குறிப்பாக ஓடந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட ஊமப்பாளையம் பகுதியில் ஒரு வாரமாக பாகுபலி யானை முகாமிட்டுள்ளது. இந்த யானை வாழை, தென்னை, கரும்பு, சோளம்,போன்ற விளைபயிர்கள் சேதப்படுத்தியுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், யானை பயிரை சேதப்படுத்துவதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம். மேலும் எங்களது வாழ்வாதாரம் முற்றிலும் அழிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் தொடர்ந்து வாழ வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே காட்டுயானைகள் கிராமங்களுக்குள் வந்து விவசாய நிலங்களை சேதப்படுத்துவதை தடுக்கும் வகையில் நிரந்தர தீர்வு காண வேண்டும். யானையை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் விவசாயிகள் அனைவரும் எங்களது உயிரை மாய்த்துக் கொள்ளும் வகையில் தமக்குத் தாமே கருணை கொலை செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரி ஓடந்துறை ஊராட்சி தலைவர் தங்கவேல் தலைமையில் கோவை மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    ×