என் மலர்
நீங்கள் தேடியது "Ayodhya Dham Junction railway station"
- பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்டு அயோத்தி சென்றடைந்தார்.
- பிரதமரை வரவேற்கும் வகையில் சாலையின் இருபுறமும் பிரமாண்டமான கட் அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன.
லக்னோ:
அயோத்தியில் மிக பிரமாண்டமான 3 அடுக்குகள் கொண்ட ராமர் கோவில் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது. அங்கு குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் விழா அடுத்த மாதம் 22-ம் தேதி மிக மிக கோலாகலமாக நடத்தப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக நடந்து வருகின்றன.
எதிர்காலத்தில் அயோத்திக்கு தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் என்பதால் அதை கருத்தில் கொண்டு அந்த நகரத்தின் உள் கட்டமைப்பை பிரதமர் மோடி தனது நேரடி மேற்பார்வையில் மேம்படுத்தி வருகிறார். அதன் முதல் கட்டமாக அயோத்தியில் அதி நவீன வசதிகளுடன் மிக பிரமாண்டமான விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது.
அதுபோன்று அயோத்தி ரெயில் நிலையமும் சீரமைக்கப்பட்டு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்தின் ஒவ்வொரு பகுதியும் பிரமிப்பில் ஆழ்த்தும் வகையில் அழகு படுத்தப்பட்டுள்ளன. இந்த பணிகளை பார்வையிட்டு தொடங்கி வைக்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் பிரதமர் மோடி முடிவு செய்தார்.
அதன்படி இன்று காலை அவர் டெல்லியில் இருந்து புறப்பட்டு அயோத்திக்கு சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவரை உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், விமான போக்குவரத்து மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர்.
வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் பிரதமர் மோடி விமான நிலையத்தில் இருந்து மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ள அயோத்தி ரெயில் நிலையத்துக்கு புறப்பட்டு சென்றார். இந்த 2 இடங்களுக்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 15 கி.மீ. ஆகும். இந்த 15 கி.மீ. தொலைவிலும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தன.
அந்த 15 கி.மீ. தூரத்துக்கு பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினார். இன்று பகல் 11 மணிக்கு இந்த ரோடு ஷோவை தொடங்கினார். பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் 15 கி.மீ. தொலைவுக்கும் சாலையின் இருபுறமும் மலர் அலங்காரங்களுடன் பிரமாண்டமான மோடி கட் அவுட்கள் வைக்கப்பட்டு இருந்தன.
சாலையின் இரு புறமும் கண்கவர் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டு பல்வேறு வடிவங்களில் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டு இருந்தன. 'புண்ணிய நகரான அயோத்திக்கு வரவேற்கிறோம்' என்ற வாசகம் அடங்கிய பதாகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டு இருந்தன. பிரதமர் மோடி படம் பொறித்த பிர மாண்டமான பேனர்களும் 15 கி.மீ. தொலைவுக்கு நிறைந்திருந்தன.
பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்திய 15 கி.மீ. தொலைவுக்கும் சுமார் 1.5 லட்சம் பேர் திரண்டிருந்தனர். அவர்கள் பிரதமர் மோடி மீது மலர்களை அள்ளி தூவி கோஷம் எழுப்பி அயோத்திக்கு வருக வருக என்று வரவேற்றனர். மோடியை உற்சாகப்படுத்தும் வகையில் 40 இடங்களில் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
சுமார் 2 ஆயிரம் நடன கலைஞர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து ஆங்காங்கே நடனமாடி பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர். மக்கள் வெள்ளத்தில் நீந்தி சென்றபடி பிரதமர் மோடி வாகனம் புதிய ரெயில் நிலையத்துக்கு சென்று அடைந்தது.
இந்நிலையில், புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரெயில் நிலையத்துக்குச் சென்றடைந்த பிரதமர் மோடி, அதன் கட்டுமான பணிகளை பார்வையிட்டார். அங்குள்ள வசதிகள் பற்றி கேட்டறிந்தார். பிறகு அயோத்தி ரெயில் நிலையத்தை பொதுமக்கள் சேவைக்காக திறந்து வைத்தார். அதன்பின் அங்கு அம்ரித் பாரத் ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.






