search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "atm cheating"

    ஏ.டி.எம். மோசடி வழக்கில் வியாபாரிகள் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #ATMrobbery

    புதுச்சேரி:

    புதுவையில் கும்பல் ஒன்று ஏ.டி.எம். எந்திரங்களில் ஸ்கிம்மர் என்கிற கருவியை ரகசியமாக பொருத்தி ஏ.டி.எம். கார்டுகளில் தகவல்களை திருடி போலி ஏ.டி.எம். கார்டுகளை உருவாக்கியது.

    பின்னர் இந்த கார்டுகள் மூலம் கடைகளில் பொருட்கள் வாங்கியது போல் காட்டி ஸ்வைப்பிங் எந்திரம் மூலம் பணத்தை தங்கள் வங்கி கணக்குக்கு மாற்றி மோசடி செய்தனர். இவ்வாறு பல கோடி ரூபாய் மோசடி நடந்தது.

    இதுபற்றி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில், பாலாஜி, ஜெயச்சந்திரன், டாக்டர் விவேக் ஆனந்த், கமல், ஷியாம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான பணமும் மீட்கப்பட்டது.

    இந்த மோசடியில் அ.தி.மு.க. பிரமுகர் சந்துருஜி, என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் சத்யா ஆகியோரும் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இவர்கள் தான் இந்த மோசடி கும்பலின் தலைவர்களாக இருந்து செயல்பட்டனர்.

    போலீஸ் விசாரணை நடப்பதை அறிந்ததும் அவர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வருகிறார்கள். இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக குருமாம்பட்டை சேர்ந்த கணேசன் (வயது 33), ரெட்டியார் பாளையத்தை சேர்ந்த சிவகுமார் (30), லாஸ்பேட்டையை சேர்ந்த டேனியல் சுந்தர்சிங் (33) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இவர்களில் கணேசன் உருளையன்பேட்டையில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார். சிவகுமார் காந்தி வீதியில் விளையாட்டு பொருட்கள் விற்கும் கடை நடத்தி வருகிறார். டேனியல் சுந்தர்சிங் கொசக்கடை வீதியில் துணிக்கடை நடத்தி வருகிறார்.

    ஏ.டி.எம். மோசடி கும்பல் இவர்களின் கடையில் பொருட்கள் வாங்கியது போல் காட்டி அங்குள்ள ஸ்வைப்பிங் எந்திரத்தில போலி ஏடி.எம். கார்டுகளை பயன்படுத்தி தங்கள் வங்கி கணக்குகளுக்கு பணத்தை மாற்றி இருக்கிறார்கள்.

    இதற்கு 3 பேரும் உடந்தையாக இருந்து வங்கி கணக்குக்கு மாற்றி தொகையில் இருந்து 10 சதவீதம் கமி‌ஷனாக பெற்றுள்ளனர்.

    இதன் அடிப்படையில் 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கணேசனிடம் இருந்து ரூ. 40 ஆயிரமும், சிவகுமாரிடம் இருந்து ரூ. 50 ஆயிரமும், டேனியல் சுந்தர்சிங்கிடம் இருந்து ரூ.75 ஆயிரமும் மற்றும் ஸ்வைப்பிங் எந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

    இந்த மோசடியில் மேலும் பலர் சம்பந்தப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. அவர்களை தேடி வருகிறார்கள்.

    3 பேர் கைதானது குறித்து சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டு ரகீம், சூப்பிரண்டு மகேஷ்குமார் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-

    இந்த மோசடியில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருக்கிறதா? என்பது பற்றி இதுவரை உறுதியான தகவல் தெரிய வில்லை.

    சந்துருஜி, சத்யா இருவரையும் கைது செய்தால் தான் மற்ற முழுவிவரங்கள் தெரிய வரும். அவர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    சமீபத்தில் அவர்கள் பெங்களூர், விசாகபட்டினத்தில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அங்கு போலீசார் சென்றனர். ஆனால், அதற்குள் அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.

    தொடர்ந்து பல்வேறு இடங்களில் தேடி வருகிறோம். அவர்கள் பற்றிய தகவல் யாருக்காவது கிடைத்தால் 9489205301 என்ற போன் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #ATMrobbery

    ×