search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anti Graft Law"

    லஞ்சம் கொடுப்பவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கத்தக்க புதிய ஊழல் தடுப்பு சட்டம், ஜனாதிபதி ஒப்புதலை தொடர்ந்து அமலுக்கு வந்தது. #Bribe #AntiGraftLaw
    புதுடெல்லி:

    ஊழல் தடுப்பு சட்டம், 1988-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதில், ஊழல் குற்றங்களும், அவற்றுக்கான தண்டனை விவரங்களும் வரையறுக்கப்பட்டு உள்ளன.

    ஆனால், லஞ்சம் கொடுப்பவர்களுக்கு தண்டனை விதிக்கும் ஷரத்து இல்லை. அதுமட்டுமின்றி, இந்தியாவில் இயற்றப்பட்ட எந்த சட்டத்திலும் இதற்கான விதிமுறை இல்லை.

    ஆகவே, முதல் முறையாக, லஞ்சம் கொடுப்பதற்கும் தண்டனை விதிக்கத்தக்க வகையில், ஊழல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அந்த திருத்த மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.



    அதன்பின்னர், ஜனாதிபதி ஒப்புதலுக்காக மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சமீபத்தில் அதற்கு ஒப்புதல் அளித்தார்.

    இதையடுத்து, இது கடந்த 26-ந் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

    இந்த மசோதாவின்படி, பொது ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்தாலோ, லஞ்சம் கொடுப்பதாக உறுதி அளித்தாலோ 7 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும்.

    இருப்பினும், லஞ்சம் கொடுக்குமாறு நிர்ப்பந்தத்தில் சிக்குபவர்களை பாதுகாக்கும் அம்சம், இந்த சட்டத்தில் உள்ளது. அப்படி நிர்ப்பந்தத்துக்கு உள்ளானவர்கள், காவல்துறை உள்ளிட்ட சட்ட அமலாக்க அமைப்புகளிடம் 7 நாட்களுக்குள் புகார் தெரிவித்தால், எந்த சிக்கலும் வராது.

    வணிக நிறுவனங்களும், இந்த சட்ட வரம்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, வணிக நிறுவனங்களுடன் சம்பந்தப்பட்டவர்கள், பொது ஊழியருக்கு லஞ்சம் கொடுத்தாலோ, லஞ்சம் கொடுப்பதாக உறுதி அளித்தாலோ அபராதத்துடன் தண்டனை விதிக்கப்படும்.

    லஞ்சம் பெறுபவர்களுக் கான குறைந்தபட்ச ஜெயில் தண்டனை, 3 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டு உள்ளது. அதிகபட்ச தண்டனை, 7 ஆண்டுகளாக இருக்கும். சிறைத்தண்டனை இல்லாதபட்சத்தில் அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும்.

    அதே சமயத்தில், பொது ஊழியர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், வங்கி பணியாளர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு இந்த சட்டத்தில் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. ஏதேனும் சிபாரிசு சம்பந்தப்பட்ட குற்றங்களை செய்திருந்தாலோ அல்லது தங்களது பணி சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுத்து இருந்தாலோ அத்தகைய பொது ஊழியர்கள் மீது, அவர்களுடைய மேல்அதிகாரிகளின் முன்அனுமதி இல்லாமல், எந்த போலீஸ் அதிகாரியும் விசாரணை நடத்தக்கூடாது என்று இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

    இருப்பினும், தனக்காகவோ அல்லது வேறு நபர்களுக்காகவோ லஞ்சம் பெறும்போதோ அல்லது பெற முயற்சிக்கும்போதோ பொது ஊழியர் கையும், களவுமாக பிடிபட்டால், அவர்கள் மீது விசாரணை நடத்த முன்அனுமதி பெறத் தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

    ஊழல் வழக்குகளை 2 ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.  #Bribe #AntiGraftLaw #tamilnews 
    ×