search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anaikattu"

    விழுப்புரம், கடலூர் மாவட்ட எல்லையில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணைக்கட்டு மீண்டும் உடைந்து சேதமடைந்தது.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் தளவானூர் கிராமம் மற்றும் கடலூர் மாவட்டம் எனதிரிமங்கலம் கிராமங்களுக்கு இடையே ஓடும் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரத்துறை அமைப்பு) சார்பில் ரூ.25 கோடியே 35 லட்சம் நிதியில் புதிதாக அணைக்கட்டு கட்டப்பட்டது.

    இது 13 கிராமங்கள் மற்றும் 2114.14 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் கட்டி முடிக்கப்பட்டு விவசாய பயன்பாட்டுக்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ந் தேதி திறக்கப்பட்டது.

    இந்த நிலையில் அணைக்கட்டு திறக்கப்பட்டு 4 மாதங்களே ஆன நிலையில் கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி அணைக்கட்டு உடைந்து தண்ணீர் வெளியேறியது. இந்த விவகாரத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    இதற்கிடையே, தற்போது மழை காரணமாக ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால், இந்த அணைக்கட்டு மேலும் சேதமடையாமல் தடுக்கும் வகையில் பொதுப்பணித்துறையினர், அந்த அணைக்கட்டின் மதகுகளை தற்காலிகமாக சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர். அணைக்கட்டின் வலதுபுற மதகுகள் முற்றிலும் உடைந்துள்ளதால் அங்கு தண்ணீர் செல்லாத வகையில் மணல் மூட்டைகளை கொண்டு தடுப்புகளை ஏற்படுத்தி, இடதுபுற மதகுகள் வழியாக தண்ணீரை வெளியேற்றி வந்தனர்.

    நேற்று அதிகாலை தளவானூர் அணைக்கட்டுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இவ்வாறு அணைக்கட்டுக்கு வரும் தண்ணீரின் வேகம் அதிகரித்ததால் அணைக்கட்டின் இடதுபுற கரைப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டது.

    அடுத்த சில மணி நேரத்தில் அணைக்கட்டின் கரைப்பகுதியில் விரிசல் ஏற்பட்டு அதன் வழியாக தண்ணீர் வெளியேறியது. நேரம் செல்ல, செல்ல அணைக்கட்டின் கரைப்பகுதி கான்கிரீட் சுவர்களும் உடைந்ததால் 3 மதகுகளும் அப்படியே சாய்ந்தது.

    தொடர்ந்து, தண்ணீரின் வேகம் அதிகரிக்க, அதிகரிக்க ஒரு மதகு வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. மற்ற 2 மதகுகளும் வெள்ளத்தில் அடித்துச்செல்லும் அபாயத்தில் உள்ளது. அணைக்கட்டு திறக்கப்பட்டு ஓராண்டிலேயே 2-வது முறையாக உடைந்து சேதமடைந்ததால் தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் அவை கடலில் வீணாக சென்று கலக்கிறது. இதனால் கடலூர், விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் மிகவும் கவலையடைந்தனர்.
    ×