search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agricultural regulation"

    • ஏலத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகளிடமிருந்து எந்தவித கட்டணமும் பெறப்படுவதில்லை.
    • வியாபாரிகளிடம் மட்டும் ஒரு சதவீத கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    குன்னத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வேளாண் வணிக உதவி வேளாண்ைம அலுவலர் நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குன்னத்தூரில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை சார்பாக புதியதாக கட்டப்பட்டுள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 28.10.2022 முதல் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று நிலக்கடலை ஏலம் நடைபெற உள்ளது.

    எனவே நிலக்கடலை அறுவடை செய்து வரும் விவசாயிகள் நிலக்கடலையை உலர வைத்து காய்ந்த நிலக்கடலையை குன்னத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வரலாம். கொண்டுவரும் நிலக்கடலையை ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதியதாக கட்டப்பட்டுள்ள சேமிப்பு கிடங்கில் இருப்பு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதுவரை 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 350 மூட்டைகள் வரை இருப்பு வைத்துள்ளனர்.ஏலத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகளிடமிருந்து எந்தவித கட்டணமும் பெறப்படுவதில்லை.

    வியாபாரிகளிடம் மட்டும் ஒரு சதவீத கட்டணம் வசூலிக்கப்படுகிறது .தங்களுடைய நிலக்கடலைக்கு அதிக விலை கிடைக்க தரம் பிரிப்பது அவசியமாகிறது. நிலக்கடலை காய்கள் தரம் உள்ளதாக இருக்க அதில் உள்ள கல், மண், தூசி, கெட்டுப்போன காய்கள், சுருங்கிய முதிராத காய்கள் இவைகளை தனியாக பிரித்து விட வேண்டும். இவ்வாறு சுத்தம் செய்யப்பட்ட நிலக்கடலை காய்களை நல்ல கோணி பைகளில் போட்டு சிப்பமிட்டு எடுத்து வர வேண்டும்.ஏலத்தில் அதிக அளவிலான வியாபாரிகள் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது நிலக்கடலைக்கு நல்ல விலை கிடைத்து வருவதால் அனைத்து விவசாயிகளும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு குன்னத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சரஸ்வதியை 9894171854 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×