search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Advertising wall"

    • தங்கள் மகளுக்கு உரிய சிகிச்சை அளித்து அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • படிப்பில் மட்டுமின்றி பல்வேறு விளையாட்டுகளிலும் ரூபிகா சிறந்து விளங்கி பரிசுகள் பெற்று தங்களுக்கும், தங்கள் கிராமத்திற்கும் பெருமை சேர்த்தார்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்துசங்கிலிப்பட்டி கிராமத்தை சேர்ந்த அய்யனார். இவரது மனைவி கற்பகவள்ளி. இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

    கணவன், மனைவி 2 பேரும் தினக்கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களது 3 குழந்தைகளும் ஆசாரிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.

    இதில் மூத்த மகள் ரூபிகா (வயது14) ஆசாரிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் முத்துசங்கிலிபட்டி கிராமத்தில் உள்ள சில தெருக்களில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    பணிகள் முடிவடைந்ததும் பணிகள் மதிப்பீடு, திட்டம் குறித்த விவரங்கள் எழுதப்பட்ட விளம்பர சுவர் கட்டப்பட்டது. இந்த சுவரின் அடித்தளம் உறுதியாக அமைக்காமல் வெறும் செங்கல், சிமெண்டு மூலம் தரமற்று இருந்துள்ளது.

    இந்நிலையில் ரூபிகா சம்பவத்தன்று பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். முத்து சங்கிலிபட்டி தெருவில் நுழைந்த போது அங்கு வைக்கப்பட்டு இருந்து ஒப்பந்த பணி விளம்பர சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

    அந்த சுவர் ரூபிகாவின் மீது விழுந்ததை தொடர்ந்து அவர் வலியால் அலறினார்.

    இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் மாணவியை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவியின் கால்களை பரிசோதித்த டாக்டர் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறினர்.

    இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியின் கால்களில் பிளேட் வைக்கப்பட்டு, மாவுக்கட்டு போட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

    அரசு பணிக்காக வைக்கப்பட்ட சுவர் இடிந்து விழுந்து கால்கள் முறிந்து வீட்டில் கடந்த 15 நாட்களாக மாணவி படுத்தபடுக்கையாய் உள்ள நிலையில், இது குறித்து சம்பந்தபட்ட ஒப்பந்தகாரரோ, அரசு அதிகாரிகளோ இதுவரை வந்து விசாரணை கூட நடத்தவில்லை என்று மாணவியின் பெற்றோர் கண்ணீர்மல்க தெரிவித்தனர்.

    மேலும் அவர்கள் தெரிவிக்கையில், தங்கள் மகளுக்கு உரிய சிகிச்சை அளித்து அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டரிடமும் புகார் அளித்துள்ளோம்.

    படிப்பில் மட்டுமின்றி பல்வேறு விளையாட்டுகளிலும் ரூபிகா சிறந்து விளங்கி பரிசுகள் பெற்று தங்களுக்கும், தங்கள் கிராமத்திற்கும் பெருமை சேர்த்தார். ஆனால் தற்போது அவர் படுத்த படுக்கையாய் கிடப்பதை எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கூலி வேலை பார்க்கும் எங்களால் தற்போது வேலைக்கும் செல்ல முடியவில்லை. எங்களது மகள் பூரண நலம் பெற்று எழுந்து நடப்பாரா என்றும், பழையபடி படிப்பு மற்றும் விளையாட்டுகளில் பங்கேற்க முடியுமா? என்றும் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே ரூபிகாவின் மருத்துவ செலவை அரசு ஏற்று அவரை பழைய நிலைக்கு கொண்டுவர உதவவேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தனர். 

    ×