என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aathar card correction"

    ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்வதற்கான கட்டணம் ரூ.30-லிருந்து ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் ஜி.எஸ்.டி. 18 சதவீதம் சேர்த்து வசூலிக்கப்படுகிறது.
    கோவை:

    இந்திய குடிமகன்கள் அனைவரும் ஆதார் அட்டை எடுக்க வேண்டும் என்றும் அதை வங்கி கணக்கு உள்பட பல்வேறு துறைகளுடன் இணைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. முன்பு ஆதார் அட்டைகள் எடுப்பதற்கு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஆதாரில் உள்ள ரகசிய தகவல்கள் கசிவதாக வெளியான புகாரை தொடர்ந்து தனியார் மையங்களில் ஆதார் அட்டைகள் எடுப்பது நிறுத்தி வைக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கோவை தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்கள், வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களில் அமைக்கப்பட்டு உள்ள ஆதார் மையங்களில் மட்டும் புதிதாக ஆதார் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அந்த மையங்களுக்கு சென்று ஆதார் எடுத்துக் கொள்கிறார்கள். அதற்கு கட்டணம் எதுவும் கிடையாது.

    இந்த நிலையில் ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்யும் பணி மட்டும் தற்போது தனியாரிடம் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் ஆதாரில் திருத்தங்கள் செய்ய வேண்டுமென்றால் அதற்கு முன்பு ரூ.30 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. அது நேற்று முன்தினம் முதல் ரூ.50 ஆக உயர்ந்து உள்ளது. இதுகுறித்து தனியார் மையத்தை சேர்ந்த ஒருவர் கூறியதாவது:-

    ஆதாரில் பெயர் மாற்றம், பெயரில் பிழை திருத்தம், முகவரி மாற்றம், செல்போன் எண் மாற்றம் உள்பட பல்வேறு மாற்றங்கள் செய்வதற்கு இதுவரை கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 1-ந் தேதி முதல் இது ரூ.50 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

    இதற்கு ஜி.எஸ்.டி. 18 சதவீதம் விதிக்கப்பட்டு உள்ளது. இதில் கட்டணம் ரூ.42.37 ஆகும். மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய ஜி.எஸ்.டி. ரூ.3.80. மாநில அரசுக்கு செலுத்த வேண்டிய ஜி.எஸ்.டி. ரூ.3.80 ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×