search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "7 people released issue"

    7 பேர் விடுதலை விவகாரம் குறித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனையை தொடங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. #Perarivalan #RajivGandhiCase #banwarilalpurohit
    சென்னை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேருக்கு முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    பிறகு அவர்களது தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.கடந்த 27 ஆண்டுகளாக இவர்கள் ஜெயிலில் உள்ளனர்.

    இவர்கள் 7 பேரை விடுதலை செய்வது பற்றி கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. தமிழக அரசே இது தொடர்பான முடிவை எடுத்துக் கொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது. இதைத்தொடர்ந்து 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.

    அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா இது தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார். அதோடு 3 நாட்களில் மத்திய அரசு உரிய பதில் அளிக்காவிட்டால் 7 பேரையும் ஜெயிலில் இருந்து விடுதலை செய்யப்போவதாக அறிவித்தார்.

    தமிழக அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து ராஜீவ் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்து இருப்பதால், இதில் முடிவு எடுக்க தமிழக அரசுக்கு உரிமை இல்லை என்று மத்திய அரசு கூறியது.

    இதனால் இந்த பிரச்சினையில் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே சட்ட ரீதியில் மோதல் ஏற்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்தது.

    கடந்த 6-ந் தேதி இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இறுதி தீர்ப்பை வெளியிட்டது. ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து இது பற்றி ஆலோசிக்க நேற்று மாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் 7 பேரை விடுதலை செய்ய கவர்னருக்கு பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டது. அந்த பரிந்துரை நேற்றே உடனடியாக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது அந்த பரிந்துரை கவர்னர் கையில் உள்ளது.

    கவர்னர் இந்த பிரச்சினையில் என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டப்படி அமைச்சரவை முடிவு செய்து பரிந்துரைப்பதை கவர்னர் ஏற்று ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று உள்ளது. அமைச்சரவை முடிவை கவர்னர் நிராகரிக்க முடியாது என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    எனவே கவர்னர் தனது முடிவை எப்போது அறிவிப்பார் என்ற ஆவல் கலந்த எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் எழுந்துள்ளது. இந்த வி‌ஷயத்தில் கவர்னர் தன்னிச்சையாக முடிவு எடுத்து தனது நிலைப்பாட்டை தெரிவிப்பாரா? அல்லது மத்திய அரசு என்ன சொல்கிறதோ அதை அப்படியே கேட்டு தலையாட்டுவாரா என்ற கேள்விக்குறி அனைவரது மனதிலும் எழுந்துள்ளது.

    தற்போதைய சூழ்நிலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் 4 விதமான முடிவுகளில் ஏதாவது ஒன்றை எடுக்க வாய்ப்பு உள்ளது. அந்த 4 விதமான முடிவுகள் வருமாறு:-

    1. தமிழக அமைச்சரவை பரிந்துரையை அப்படியே ஏற்றுக் கொண்டு 7 பேரை விடுதலை செய்ய உடனே உத்தரவிடலாம்.

    2. அமைச்சரவை பரிந்துரை மீது கவர்னர் முடிவு எடுக்க எந்த கால நிர்ணயமும் அரசியலமைப்பு சட்டத்தில் இல்லை. எனவே கவர்னர் பன்வாரிலால் 7 பேர் விடுதலை பரிந்துரையை சிறிது நாட்கள் கிடப்பில் போடலாம். அவர் மேலும் கால தாமதமும் செய்யலாம்.

    3. முன்னாள் பிரதமரை படுகொலை செய்துள்ள மிக முக்கியமான வி‌ஷயம் என்பதால் 7 பேரை விடுதலை செய்வது பற்றி மத்திய அரசிடம் கவர்னர் யோசனை கேட்கலாம்.



    4. தமிழக அமைச்சரவை எடுத்துள்ள முடிவை மறுபரிசீலனை செய்ய கவர்னர் உத்தரவிடலாம். இதற்கான அதிகாரம் கவர்னருக்கு இருக்கிறது.

    இந்த 4 விதமான முடிவுகளில், எந்த முடிவை எடுப்பது என்பது பற்றி கவர்னர் பன்வாரிலால் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனையை தொடங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. எனவே கவர்னர் முடிவு விரைவில் தெரியும் என்று கூறப்படுகிறது. #Perarivalan #RajivGandhiCase
    ×