என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2nd counselling"

    பொறியியல் படிப்புகளுக்கான 2-வது சுற்று ஆன்லைன் கலந்தாய்வு முடிந்துள்ள நிலையில் 150 என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    சென்னை:

    பொறியியல் மாணவர் கலந்தாய்வு இந்த வருடம் முதன் முதலாக ஆன்லைனில் நடைப்பெறுகிறது. கடந்த மாதம் 25-ந்தேதி பொது கலந்தாய்வு தொடங்கியது. 5 சுற்றுக்களாக நடைபெறும் இந்த கலந்தாய்வில் மாணவ- மாணவிகள் அரசின் உதவி மையங்கள் மூலமாக கல்லூரிகளை தேர்வு செய்து வருகின்றனர். 2 சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளன.

    2 சுற்றுகளுக்கும் 200 முதல் 175 வரை கட்-ஆப் மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். 12,206 பேர் கல்லூரியை தேர்வு செய்து ஆன்லைனில் ஒதுக்கீடு ஆணையை பெற்றுள்ளனர்.

    அண்ணா பல்கலைக்கழகத்துறை கல்லூரிகளான குரோம்பேட்டை எம்.ஐ.டி.யில் 97 சதவீத இடங்களும், கிண்டி பொறியியல் கல்லூரியில் 96 சதவீத இடங்களும், அழகப்பா தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் 93 சதவீத இடங்களும் நிரப்பியுள்ளன. தனியார் கல்லூரிகளை பொறுத்தமட்டில் சென்னை எஸ்.எஸ்.என்.கல்லூரியில் 91 சதவீத இடங்கள் நிரம்பி விட்டன. வழக்கமாக கலந்தாய்வு தொடங்கிய அடுத்த சில நாட்களில் புகழ் பெற்ற கல்லூரிகளில் உள்ள இடங்கள் முழுமையாக நிரம்பி விடும்.

    ஆனால் இந்த வருடம் அத்தகைய நிலை காணப்படவில்லை. 150-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. அந்த வரிசையில் புகழ்பெற்ற கல்லூரிகளும் இடம் பெற்றுள்ளன. இதனால் தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகத்தினர் அதிர்ச்சியில் உணர்ந்துள்ளனர்.

    ஒட்டு மொத்தமாக 40 கல்லூரிகளில் 30 சதவீத இடங்களும், 70 சதவீத கல்லூரிகளில், 10 சதவீத இடங்களும் மட்டுமே நிரம்பியுள்ளன.

    இனி நடைபெற உள்ள சுற்றுகளிலும் இதே நிலை தொடர்ந்தால் 200 கல்லூரிகளில் 10 சதவீத இடங்கள் கூட நிரம்புவது கடினம் என கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்தார்.

    இந்த நிலையில் 3-வது சுற்று கலந்தாய்வு இன்று நிறைவடைந்தது. இதில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு வருவதாக பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார். இந்த கலந்தாய்வு 175 முதல் 150 வரை கப்- ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    ×