search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "11 college professors suspend"

    போலி பி.எச்.டி. பட்டம் கொடுத்து பணியில் சேர்ந்த 11 கல்லூரி பேராசிரியர்களை கல்லூரி கல்வி இயக்குனர் சஸ்பெண்டு செய்துள்ளார்.
    சென்னை:

    கல்லூரி கல்வி இயக்ககம் கட்டுப்பாட்டில் அரசு கலைக்கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் பி.எச்.டி. முடித்து இருக்க வேண்டும்.

    செட் அல்லது நெட் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இந்த கல்வித் தகுதி உடையவராக இருந்தால் மட்டுமே பணியாற்ற முடியும். எம்.பில். மட்டும் படித்து இருந்தால் தகுதியாக ஏற்பது இல்லை. பி.எச்.டி. (டாக்டர்) பட்டம் பெற்று இருந்தால் மட்டுமே அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணியாற்ற முடியும்.

    இந்த நிலையில் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பி.எச்.டி. போலி சான்றிதழ் கொடுத்து 11 பேராசிரியர்கள் பணியாற்றி இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களை கல்லூரி கல்வி இயக்குனர் சஸ்பெண்டு செய்துள்ளார். இந்த சம்பவம் உயர் கல்வி துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேகாலயா, ராஜஸ்தான், பீகார் போன்ற மாநிலங்களில் உள்ள பல்கலைக் கழகங்களில் பி.எச்.டி. பட்டம் பெற்றதாக போலி சான்றிதழ் கொடுத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    கல்வித்துறை அதிகாரிகள் விசாரணையில் அது போன்ற பல்கலைக்கழகங்களே இல்லை என்பதும், பல்கலைக்கழகமே செயல்படாத நிலையில் போலி சான்றிதழ் தயாரித்து 11 பேராசிரியர்கள் பணியாற்றி வந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்களின் சான்றிதழ்களை சரி பார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் தாவரயியல் துறையை சேர்ந்த உதவி பேராசிரியர்கள் 2 பேர் போலியான பி.எச்.டி. சான்றிதழ் கொடுத்து இருப்பது கடந்த ஜனவரி மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஒருவர் ராஜஸ்தானில் உள்ள வீர்ரன்வீர் பல்கலைக்கழக சான்றிதழும், மற்றொருவர் மேகாலயா பல்கலைக்கழக பெயரில் சான்றிதழும் கொடுத்து இருந்தனர்.

    இந்த 2 பெயரிலும் பல்கலைக்கழகங்களே இல்லை என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் 50-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் போலி பி.எச்.டி. சான்றிதழ் கொடுத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியில் சேர்ந்து இருக்கலாம் என கல்லூரி துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த பேராசிரியர்கள் மீது கல்லூரி கல்வி இயக்ககம் கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் சஸ்பெண்டு செய்யப்பட்ட பேராசிரியர்கள் அரசி டம் இருந்து பாதி சம்பளம் பெறுவதாகவும் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

    போலி சான்றிதழ் பிரச்சினையில் அரசு உதவி பெறும் கல்லூரிகள் பாதிக்கப்பட்டுள்ளன. போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த பேராசிரியர்கள் மீது கடுமையான தண்டனை இல்லை. போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்களை உடனடியாக பணியில் இருந்து நீக்க வேண்டும் என்று பல்கலைக்கழக ஆசிரியர் கழக தலைவர் என். பசுபதி தெரிவித்துள்ளார். பெரும்பாலான போலி பி.எச்.டி. சான்றிதழ்கள் வட மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழக பெயரில் வந்துள்ளது.

    பணியில் சேர்க்கும் போதோ அதன் பின்னரோ சான்றிதழ்களை ஆய்வு செய்து இருந்தால் இந்த தவறுகளை கண்டுபிடித்து இருக்கலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
    ×