search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "10 pound thali chain flush"

    • திருமண அழைப்பிதழ் கார்டு வாங்குவது போல் மோசடி.
    • கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை நகரத்தில் உள்ள சின்னக்கடை வீதி என்பது முக்கியமான பகுதியாகும். இப்பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன.

    தினமும் காலை முதல் இரவு வரை இப்பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த சின்னக்கடை வீதியில் திருவண்ணாமலை குபேர நகரை சேர்ந்த சந்திரசேகர் என்பவரது மனைவி கவிதா என்பவர் திருமண அழைப்பிதழ் கார்டு மற்றும் நோட்டு புத்தகம் விற்பனை கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று பிற்பகல் 2.30 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் 'ஹெல்மெட்' அணிந்தபடி வந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் 'ஹெல்மட்டை' கழற்றி மோட்டார் சைக்கிளில் வைத்துவிட்டு அந்த கடையில் திருமண அழைப்பிதழ் கார்டு வாங்குவது போன்று நின்று கொண்டிருந்தார்.

    கார்டு எடுப்பதற்காக கவிதா கடைக்குள் சென்ற போது அந்த வாலிபர் திடீரென கடைக்குள் புகுந்து அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது கழுத்தில் இருந்த 10 பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு அவரை தள்ளி விட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்த நபர் அங்கிருந்து சென்றுவிட்டார்.

    இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை சேகரித்து விசாரணை நடத்தினர்.

    அதில் வாலிபர் சின்னக்கடை வீதியில் வந்து பைக்கில் நிற்பது ஹெல்மெட்டை கழற்றி வைத்துவிட்டு திருமண அழைப்பிதழ் கடைக்கு சென்று செயினை பறித்து விட்டு வேகமாக வெளியே ஓடி வந்து பைக்கில் ஏறி செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளன.

    இந்த காட்சிகளை வைத்து போலீசார் செயின் பறிப்பு கொள்ளையனை தேடிவருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×