என் மலர்tooltip icon

    வழிபாடு

    நாளை அனுமன் ஜெயந்தி... ராம நாமம்  சொல்லி வழிபட்டால் துன்பம் தீரும்
    X

    நாளை அனுமன் ஜெயந்தி... ராம நாமம் சொல்லி வழிபட்டால் துன்பம் தீரும்

    • இரவில் தூங்கும் முன் ஸ்ரீராமஜெயம் என 108 முறை சொல்ல வேண்டும்.
    • ராமதூதர் அனுமனுக்கு துளசிமாலை சாத்துவதால் ராம கடாட்சம் பெற்று நல்ல கல்வி, செல்வம் பெறலாம்.

    மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் அனுமன். அவரது ஜெயந்தி நாள் நாளை கொண்டாடப்படுகிறது. கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றையும் பெற அருள்தரும் தெய்வமாக ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். அனுமன் ஜெயந்தி அன்று காலையிலேயே எழுந்து சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். அனுமனின் ஆசிரியர் சூரியன். அவரிடமே அனுமன் இலக்கணம் படித்து, சர்வ வியாகரண பண்டிதர் என்னும் பட்டம் பெற்றார். வியாகரணம் என்றால் இலக்கணம்.

    காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது அனுமனின் குருவை நமது குருவாக மதித்து போற்றுவதாக அர்த்தம். ராம பக்தன் அனுமனின் ஜெயந்தி நாளில் ராமனின் புகழ் பரப்பும் பாடல்களை பாட வேண்டும்.

    மாலையில் ஸ்ரீராம ஜெயம் சொல்ல வேண்டும். அவரது கோவிலுக்குச் சென்று வெண்ணெய், வெற்றிலை, வடை மாலை சாத்தி வழிபட வேண்டும். ஏழைக் குழந்தைகளுக்கு புத்தகம்-நோட்டு தானம், கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும்.

    இரவில் தூங்கும் முன் ஸ்ரீராமஜெயம் என 108 முறை சொல்ல வேண்டும். பொதுவாக ஆஞ்சநேயர் பெருமாள் கோவில்களில் தனி சன்னதியிலும், சிவாலயங்களில் தூணிலும் அருள்பாலிப்பது வழக்கம்.

    சொல் ஒன்று இருந்தால் அதற்கு ஒரு அர்த்தம் இருப்பது போல், ராமா என சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் ஆஞ்சநேயர் இருப்பது நிச்சயம். இவரது வழிபாட்டில் ராமநாம பஜனையும், செந்தூரப்பூச்சும், வெற்றிலை மாலையும் நிச்சயம் இடம் பெறும். இவரது சன்னதியிலும் துளசியே பிரதான பிரசாதம்.

    அனுமன் அவதார நாளில் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று

    ஓம் ஆஞ்சநேயாய வித்மகே

    ராமதூதாய தீமகி

    தன்னோ அனுமன் பிரசோதயாத்

    என்ற அனுமன் காயத்ரி மந்திரம் சொல்லி வணங்கவேண்டும்.

    அனுமனை வணங்குவதால், புத்தி, பலம், புகழ், குறிக்கோளை எட்டும் திறன், அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்குவன்மை ஆகியவற்றைப் பெறலாம். ராமதூதர் அனுமனுக்கு துளசிமாலை சாத்துவதால் ராம கடாட்சம் பெற்று நல்ல கல்வி, செல்வம் பெறலாம்.

    அசோகவனத்தில் சீதையைக் கண்டு ராமபிரானின் நிலையை அனுமன் எடுத்துரைத்தார். சந்தோஷமடைந்த சீதை அனுமனை ஆசீர்வதிக்க எண்ணி அருகில் வளர்ந்திருந்த வெற்றிலையைக் கிள்ளி தலையில் தூவி ஆசிர்வதித்தாள். இந்த இலை உனக்கு வெற்றியைத் தரட்டும் என்றாள்.

    வெற்றிலையை காரணமாக்கி ஆசீர்வதித்தமையால் பக்தர்கள் தங்கள் செயல்பாடுகள் வெற்றி பெற வெற்றிலை மாலை சாத்துகின்றனர். திருமணங்களில் வெற்றிலை தாம்பூலம் கொடுப்பது, மணமக்களுக்கும், அவர்களை ஆசிர்வதிக்க வந்தவர்களுக்கும் வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வேண்டும் என்பதற்காகத் தான்.

    நரசிம்மன், வராகம், கருடன் ஆகிய சக்திகள் அனுமனிடத்தில் ஒருங்கே அமைந்ததாலும், அனுமனுக்கு ஈஸ்வர அம்சம் உள்ளதாலும் எலுமிச்சம்பழ மாலை சாற்றி வழிபடலாம்.

    ராமசேவைக்காக தன் உடம்பைப் புண்ணாக்கிக் கொண்டவர் அனுமன். போர்க்களத்தில் அவர் பட்ட காயம் கொஞ்ச நஞ்சமல்ல. அவரைக் கட்டிப் போட்டு தெருத்தெருவாக இழுத்துச் சென்றார்கள். காயத்தின் வேதனை குறைய குளிர்ந்த பொருள் பூசுவது இயல்பு தானே! அதனால் தான், அனுமனுக்கு வெண்ணெய் சாத்தும் வழக்கம் ஏற்பட்டது.

    வெண்ணெய் போன்று வெள்ளை உள்ளமுள்ள பக்தர்களை அனுமனே தன்னுடன் சேர்த்து அருள் செய்கிறான் என்பதன் அடையாளமாக வெண்ணெய் சாத்தப்படுகிறது.

    ஆஞ்சநேயர் அவல், சர்க்கரை, தேன், பானகம், நீர் மோர், கதலிப்பழம், கடலை முதலிய நிவேதனப் பொருட்களை அவர் விரும்பி உண்டு மகிழ்வார். ஸ்ரீராம நவமி உற்சவம் கொண்டாடும் இடங்களில் எல்லாம் ஆஞ்சநேயர் நேரில் வந்து அடியார்களுள் அடியாராய் பக்தருள் பக்தராய் அமர்ந்து ரசித்து அனைவருக்கும் சகல சுபிட்சங்களையும் வாரி வழங்கிப் பேரருள் புரிகிறார்.

    "ஆத்யந்த பிரபு'

    விநாயகரும், அனுமனும் இணைந்த வடிவத்தை "ஆத்யந்த பிரபு' என்பர். ஆதி+அந்தம் என்பதையே இவ்வாறு சொல்கிறார்கள். "ஆதி' என்றால் "முதலாவது'. முதல் கடவுள் விநாயகர். "அந்தம்' என்றால் "முடிவு'. விநாயகரை வணங்கி ஒரு செயலைத் துவங்கினால், அனுமன் அதை வெற்றிகரமாக முடித்து வைப்பார். ஒருபுறம் விநாயகரின் தும்பிக்கையும், மறுபுறம் வானர முகமும் கொண்டது ஆத்யந்த பிரபு வடிவம். பிரம்மச்சர்ய விரதம் மேற்கொண்டுள்ளோர், இந்த இரண்டு பிரம்மச்சாரிகளும் இணைந்த வடிவத்தை தங்கள் இஷ்ட தெய்வமாகக் கொண்டுள்ளனர். அனுமன், சிவனின் அம்சம். விநாயகர் சக்தியிடமிருந்து (பார்வதி) உருவானவர்.

    அனுமன் துதி

    அஞ்சிலே ஒன்று பெற்றான்

    அஞ்சிலே ஒன்றைத் தாவி

    அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக்

    கண்டு அயலார் ஊரில்

    அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன்

    எம்மை அளித்துக் காப்பான்.

    பொருள்: வாயுவுக்கு பிறந்தவன் அனுமன். ஆகாயத்தில் பறந்து, கடல் தாண்டி இலங்கை சென்றான். பூமிதேவியின் மகளான சீதையைக் கண்டான். அவளை மீட்க இலங்கைக்கு நெருப்பு வைத்தான். அவன் தன்னையே நமக்கு தந்து பாதுகாப்பான்.

    பஞ்சபூதங்களில் ஒன்றான வாயுவுக்கு பிறந்தான். வானில் (ஆகாயம்) பறந்தான். கடலை (நீர்) தாண்டினான். ஜனகர் தங்கக் கலப்பையால் யாக குண்டத்திற்கு பூமியை (மண்) தோண்டும் போது கிடைத்த சீதையைக் கண்டான். பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பை இலங்கைக்கு வைத்தான். ஆக, பஞ்சபூதங்களையும் அடக்கியாண்டவர் அனுமன். அவரை வணங்கினால் இந்தபஞ்ச பூதங்கள் நமக்கு நன்மையை மட்டுமே செய்யும்.

    எப்போது வழிபடலாம்?

    தமிழ் பஞ்சாங்கப்படி, இந்த ஆண்டு நாளை (வெள்ளிக்கிழமை) அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது. நாளை காலை 5.57 மணிக்கு தொடங்கி, நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 7.54 வரை அமாவாசை திதி உள்ளது.

    ஆனால் சனிக்கிழமை அதிகாலை 12.05 மணிக்கு தான் மூலம் நட்சத்திரம் துவங்குகிறது. இதனால் திதியை அடிப்படையாக வைத்து அனுமன் ஜெயந்தியை கொண்டாடுபவர்கள் நாளையும், நட்சத்திரத்தை அடிப்படையாக வைத்து கொண்டாடுபவர்கள் நாளை மறுநாளும் அனுமன் ஜெயந்தியை கொண்டாடலாம்.

    ஆனால் நாளை மறுநாள் காலை 7.54 மணி வரை மட்டுமே அமாவாசை திதி உள்ளதால், அதற்கு முன்பாக அனுமன் ஜெயந்தி வழிபாடுகளை செய்வது சிறப்பு.

    Next Story
    ×