என் மலர்
வழிபாடு

திருப்பதி திருக்குடை ஊர்வலம் 22-ந்தேதி சென்னையில் தொடக்கம்
- தென் இந்தியாவின் மிகபிரமாண்டமான திருக்குடை ஊர்வலத்தை 20 லட்சத்துக்கும் அதிகமானோர் தரிசிக்கின்றனர்.
- திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு சமர்ப்பிக்க வேண்டிய காணிக்கைகள், திருப்பதி திருக்குடை ஊர்வலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி பிரம்மோற்சவ காலத்தில், ஏழுமலையான் கோவிலில் நடக்கும் கருட சேவையை முன்னிட்டு, தமிழக மக்கள் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட், திருமலை ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு 11 அழகிய வெண்பட்டு திருக்குடைகளை சென்னையில் இருந்து 5 நாட்கள் ஊர்வலமாக எடுத்து சென்று சமர்ப்பணம் செய்து வருகிறது.
21-வது ஆண்டாக, இந்த ஆண்டும் திருப்பதி திருக்குடை ஊர்வலம், வருகிற 22-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10.31 மணிக்கு, சென்னை பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் தொடங்குகிறது. தொடர்ந்து 5 நாட்கள் ஊர்வலமாக சென்று, வரும் 27-ந்தேதி சனிக்கிழமை மாலை 3 மணிக்கு திருமலையில், ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. தென் இந்தியாவின் மிகபிரமாண்டமான திருக்குடை ஊர்வலத்தை 20 லட்சத்துக்கும் அதிகமானோர் தரிசிக்கின்றனர்.
22-ந்தேதி நடைபெறும் தொடக்க விழா நிகழ்ச்சியில், உடுப்பி ஸ்ரீ பலிமார் மடம் பீடாதிபதி ஸ்ரீ வித்யாதீஷ தீர்த்தரு சாமிகள் ஆசியுரை வழங்கி திருக்குடைகள் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் எஸ்.வேதாந்தம்ஜி, அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி, விசுவ ஹிந்து வித்யா கேந்திரா பொதுச்செயலாளர் டாக்டர் கிரிஜா சேஷாத்திரி, தமிழ்நாடு விசுவ ஹிந்து பரிஷத் மாநில செயல் தலைவர் ஆர்.செல்லமுத்து, பொதுச்செயலாளர் எஸ்.சோமசுந்தரம் ஆகியோர் பேசுகின்றனர்.
அன்றைய தினம் திருக்குடை ஊர்வலம், என்.எஸ்.சி. போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக சென்று, மாலை 4 மணிக்கு திருக்குடைகள் கவுனி தாண்டுகிறது.
23-ந்தேதி ஐ.சி.எப்., ஜி.கே.எம். காலனி, திரு.வி.க.நகர், பெரம்பூர் வழியாக, வில்லிவாக்கம் சவுமிய தாமோதரப் பெருமாள் கோவில் சென்றடைந்து, இரவு தங்குகிறது. 24-ந்தேதி பாடி, அம்பத்தூர் எஸ்டேட், முகப்பேர், அம்பத்தூர், திருமுல்லைவாயில் சென்றடைந்து இரவு தங்குகிறது.
25-ந்தேதி ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், வழியாக, திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில் சென்றடைகிறது. 26-ந்தேதி திருவள்ளூர் மணவாள நகர், திருப்பாச்சூர் வழியாக திருச்சானூர் சென்றடைகிறது. அங்கு பத்மாவதி தாயாருக்கு 2 திருக்குடைகள் சமர்க்கப்படுகின்றன.
பின்னர், 27-ந்தேதி திருமலை செல்லும் திருக்குடைகள், மாலை 3 மணிக்கு மாடவீதி வலம்வந்து வஸ்திரம் மற்றும் மங்களப் பொருட்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம், ஏழுமலையானுக்கு திருக்குடைகள் சமர்ப்பணம் செய்யப்படுகின்றன.
திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு சமர்ப்பிக்க வேண்டிய காணிக்கைகள், திருப்பதி திருக்குடை ஊர்வலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஊர்வலம் வரும்போது திருக்குடையின் மீது நாணயங்களை வீசுவதோ, காணிக்கைகள் செலுத்துவதோ கூடாது.
இவ்வாறு ஆர்.ஆர்.கோபால்ஜி கூறியுள்ளார்.






