என் மலர்
வழிபாடு

குலதெய்வ பூஜை செய்யும் முக்கிய வழிமுறை
நமக்கு விருப்பமான கடவுள்கள் ஏராளமாக இருந்தாலும், நாம் முதற் கடவுளாக வணங்க வேண்டியது விநாயகரையும், குலதெய்வத்தையும் தான்.. இவர்களை வணங்கிய பிறகே பிற கடவுள்களை வணங்குவது தான் சரியான முறையாகும்..
ஆண்டுக்கு ஒரு முறை அல்லது 6 மாதத்திற்கு ஒரு முறையாவது குல தெய்வ கோயிலுக்கு சென்று வழிபட்டு வருவது நன்மை தரும்..
குலதெய்வத்தை வீட்டிலேயே வணங்கலாமா? என்று பலருக்கும் சந்தேகங்கள் உண்டு.
ஆம்.. குலதெய்வத்தை வீட்டிலேயே வணங்கலாம் அதற்கு தேவையானது ஒரு மண் குடுவை, மற்றும் தீபம் ஏற்றும் விளக்கு.
முதலில் மண் குடுவையையும் விளக்கையும் நீரில் நன்கு சுத்தம் செய்து, துடைத்துவிட்டு பின்னர் குடுவையின் மஞ்சள் பூசி, அவரவர் குடும்ப வழக்கப்படி பட்டை அல்லது நாமமிட்டு அதனுள் பாதி குடுவை நிறையும் வரை தவிடு சேர்க்கவும்..
பிறகு, ஒரு வெள்ளை துணியை மஞ்சளில் நனைத்து அதில் 27 அல்லது 29 ஏதேனும் ஒரு எண்ணிக்கையில் ஒரே மாதிரியான ஒரு ரூபாய் நாணயங்களை சேர்த்து அதனை கட்டி முடித்துவிட்டு அதன் மீது ஒரு மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து அதன் மீது ஒரு வாசனை பூவை வைத்து அந்த மண் பானைக்குள் வைத்து விடுங்கள்..
பிறகு இந்த மண் குடுவையை பித்தளை தட்டில் வைத்து அதனை சுற்றி வாசனை மலர்களை வையுங்கள்..
குடுவையின் மேல் தட்டை வைத்து மூடி, அதன் மீது விளக்கில் நெய் ஊற்றி தாமரை தண்டு திரி அல்லது பஞ்சு திரி போட்டு தீபமேற்றி வீட்டின் பூஜை அறையில் குபேர மூலையில் வைத்து வழிபட வேண்டும்.
வாரம் ஒரு முறை இந்த விளக்கை ஏற்றி வர வேண்டும். இந்த மண் குடுவையும் அதன் மீது நாம் வைக்கும் விளக்கையும் குடுவைக்குள் போடும் தவிட்டையும் வருடத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.
மாற்றும்போது பழைய குடுவை மற்றும் விளக்கை ஆற்றில் விட்டுவிட வேண்டும். ரூபாய் நாணயங்களை குலதெய்வ உண்டியலில் சேர்த்து விட வேண்டும்.
ஏதேனும் நமக்கு வேண்டுதல் இருப்பின் அதனை மனதில் நினைத்துக்கொண்டு 5 வாரங்கள் சனிக்கிழமை காலை வேளையில் தீபம் ஏற்றி வந்தால் நாம் நினைத்த காரியம் நிச்சயம் கைக்கூடும்..






